பதிவு செய்த நாள்
05
டிச
2014
11:12
சிவன் ஜோதி ரூபமாக காட்சி தரும் நாளாகவும், முருகனுக்குஉரிய நட்சத்திர விரதமாகவும் கார்த்திகை விளங்குகிறது. திருக்கார்த்திகை அன்று தொடங்கி, தொடர்ந்து 12 ஆண்டுகள் மாதம் தோறும் (144 மாதங்கள்) கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொண்டால் வாழ்வில் நினைத்தைச் சாதிக்கலாம்.
திருக்கார்த்திகையன்று காலையில் சாப்பிடக் கூடாது. மதியம் பச்சரிசி சாதம் உண்ண வேண்டும். மாலையில் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். அரிசி மாவை மஞ்சள் நீரில் கரைத்து, சிறிது கெட்டியான பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில், பெண்களின் வலது கையை நனைத்து, வீட்டுக்கதவுகளில் அப்படியே பதிக்க வேண்டும். உள்ளங்கை தரிசனம் லட்சுமி கடாட்சம் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்வதுண்டு. மாலை ஆறு மணிக்கு மேல், வீட்டில் விளக்கேற்ற வேண்டும். வாசல்படியிலும், நுழைவு இடத்திலும் குறைந்தது ஆறு விளக்குகளாவது ஏற்ற வேண்டும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றலாம். விளக்கின் முன் இலை விரித்து, பிடி கொழுக்கட்டை, அவல், கார்த்திகை பொரி, பழம் படைத்து வணங்க வேண்டும். ’ஓம் முருகா’ ’ஓம் சரவணபவ’ என்னும் மந்திரங்களை 108, 1008 என்ற எண்ணிக்கையில் ஜபம் செய்ய வேண்டும். சிவபுராணம், கந்தபுராணம், திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், சண்முக கவசம் போன்ற நூல்களைப் படிக்கலாம். பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். மாலையில் மலைக்கோயில்களை வலம் வரலாம். சொக்கப்பனை தரிசனம் செய்யலாம். சிவன், முருகன் அருளால் நம் வாழ்வில் என்றும் ஒளிவீசும்.