பதிவு செய்த நாள்
08
டிச
2014
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கமலா பீடத்தில், திருநங்கைகளுக்கு பாத பூஜை வழிபாடு நடந்தது. திருவண்ணாமலை கமலா பீடத்தில், ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழாவில், அர்த்தநாரீஸ்வரர் ஆண்டுக்கு, ஒரு முறை மஹா தீபத்தன்று, ஒரு நிமிடம் மட்டும் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதை கொண்டாடும் வகையில், மஹா தீபம் முடிந்த பின், கமலா பீடத்தில் திருநங்கைகளுக்கு, பாத பூஜை செய்து, ஆசீர்வாதம் பெறும் நிகழ்ச்சி நடக்கும். நேற்று நடந்த, இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள், கமலா பீடத்தில் சிவ புராணம் பாடி அண்ணாமலையாரை வழிபட்டனர். தொடர்ந்து உண்ணாமுலையம்மனை போற்றி, பாட்டு பாடி பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும், திருநங்கைகளுக்கு, வஸ்திரம் மற்றும் காணிக்கை செலுத்தி, பாத பூஜை செய்து அனைவரது காலிலும் விழுந்து ஆசி பெற்றனர். கமலா பீடத்தின் சார்பில், 108 பெண்கள் கலந்து கொண்டு தமிழில் வேத மந்திரங்கள் பாடி அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் மற்றும் சமேத திருமால் கமலாதாரணியை வழிபட்டனர்.