சபரிமலை: கேரள போலீஸ் ஏற்படுத்திய ’விர்ச்சுவல் கியூ ’ என்ற ஆன்லைன் முன்பதிவு கியூவில் ’ஆப்சென்ட்’ ஆகும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை வரை மொத்தம் 2.80 லட்சம் பேர் பதிவு செய்து வசதியை பயன்படுத்தவில்லை. சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக கேரள போலீஸ் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டது ’விர்ச்சுவல் கியூ’. பக்தர்கள் தங்கள் அடையாள அட்டை மற்றும் தரிசன நேர விபரங்களை www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் ஒரு ’பிரின்ட்அவுட்’ கிடைக்கும். அதில் குறிப்பிட்ட அடையாள அட்டை மற்றும் அந்த பிரின்ட் அவுட்டை, தரிசன நேரத்தின் 2 மணி நேரத்துக்கு முன் பம்பையில் இதற்கென உள்ள கவுண்டரில் கொடுத்தால் இங்கு ஒரு கூப்பன் கொடுக்கப்படும். அதை பெற்றுக்கொண்டு செல்பவர்கள் மரக்கூட்டத்தில் இருந்து சந்திராங்கதன் ரோடு வழியாக சன்னிதானம் சென்று நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்யலாம். இதற்கு எந்த சேவை கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. நேற்று அதிகாலை ஒரு மணி வரை இந்த இணையதளம் மூலம் 7 லட்சத்து 46 ஆயிரத்து 362 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் நான்கு லட்சத்து 66 ஆயிரத்து 450 பேர் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர். 2.80 லட்சம் பேர் முன்பதிவு செய்தும் இந்த வசதியை பயன்படுத்த வில்லை.