பதிவு செய்த நாள்
17
டிச
2014
02:12
சதாசிவலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று, சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, சிறப்பு யாகம் மற்றும் பரிகார பூஜைகள் நடந்தன. திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ளது மனோன்மணி உடனுறை சதாசிவலிங்கேஸ்வரர் கோவில். இக்கோவிலில், சனிபகவானுக்கு தனி சன்னிதி உள்ளது.நேற்று, துலா ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு, சனி பகவான் இடம்பெயர்ந்தார். இதையொட்டி, கோவில் வளாகத்தில், பிற்பகல் 12:00 மணிக்கு, ஒரு யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், கலச பூஜை நடந்தன. தொடர்ந்து, பிற்பகல் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.பின்னர், 108 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகம் மற்றும் பிற்பகல் 2:44 மணிக்கு, சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தன. மேலும், சனிபகவானுக்கு பரிகார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தன. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல், திருத்தணி அடுத்த, நாபளூர் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருத்தணி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உட்பட, திருத்தணி தாலுகாவில் உள்ள சிவன் கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. கும்மிடிப்பூண்டி: சாமிரெட்டிகண்டிகை செல்வ விநாயகர் கோவிலில், நேற்று, சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை கிராமம், பெரியார் நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், நேற்று, சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. சனி பகவானுக்கு சிறப்பு ஹோம்களும், அபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து, அனைத்து ராசிகளுக்கான சனி தோஷ பரிகார பூஜை நடைபெற்றது. மதியம் 2:45 முதல், இரவு 7:30 மணி வரை நடைபெற்ற சிறப்பு பரிகார பூஜையில், கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள, கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சனீஸ்வரனை வழிபட்டு சென்றனர்.