பதிவு செய்த நாள்
05
ஜன
2015
10:01
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, கோவில் தேரை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில், பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா மகா தரிசன விழா, கடந்த 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு, தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.நாதஸ்வர கச்சேரி, வேதபாராயணத்துடன் காலையில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா, மாலையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் வீதிவுலா நடக்கிறது.
நடராஜர் பெருமான் தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்து, சித்சபையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் புறப்பாடாகி, ஆனந்த நடனம் ஆடியவாறு, காலை 7:00 மணிக்கு, திருத்தேரில் எழுந்தருளினார்.விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய, ஐந்து சுவாமிகளின் தேரோட்டம் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலை 4 மணிக்கு, பருவதராஜ சமூகத்தினரின் சிறப்பு பூஜை நடைபெற்று, மாலை தேர் நிலைக்கு சென்றது.பொது தீட்சிதர்கள் சார்பில், இன்று லட்சார்ச்சனை நடக்கிறது. அதிகாலை சிறப்பு மகா அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்று, ராஜ அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி காட்சியளிக்கிறார்.