கீழக்கரை:ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் பச்சை மரகத நடராஜருக்கு சந்தனக் காப்பு கலைக்கப்பட்டது.
உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் பச்சை மரகதக்கல் நடராஜர் சிலை உள்ளது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, கடந்த ஆண்டு பூசிய சந்தனக்காப்பு கலைதல் நிகழ்ச்சி நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. காலை 11 மணிக்கு நடராஜருக்கு 18 வகை அபிஷேகம் நடந்தது. இரவு 10 மணி வரை சந்தனாதி தைலம் பூசப்பட்டிருந்தது. திருமுறை பாராயணம், சிவபுராணம், தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டன. இரவு 10:30 மணிக்கு நடந்த மகா அபிஷேகத்திற்கு பின், கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளினார்.
இன்று (ஜன.,5) அதிகாலை 4 மணிக்கு நடராஜர் சிலைக்கு மீண்டும் சந்தனம் பூசப்படும். காலை 10 மணிக்கு மேல் கூத்தர் பெருமான் வீதி உலா, மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து வெள்ளி ரிஷப சேவையில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கும்.