பதிவு செய்த நாள்
05
ஜன
2015
12:01
தர்மபுரி: உலக நன்மைக்காக, தர்மபுரி இலக்கியம்பட்டியில், 1,000க்கும் மேற்பட்டோர், திருப்பதிக்கு புனித யாத்திரைக்கு சென்றனர். தர்மபுரி, இலக்கியம்பட்டியை சேர்ந்த மக்கள், மார்கழி மாதத்தில், திருப்பதி வெங்கடாஜலபதிக்கு, விரதம் இருந்து, தினமும் திருப்பாவை, திருவெம்பாவை பாடி, ஊர் முழுவதும் ஊர்வலம் சென்று வருவது வழக்கம்.
மேலும், உலக நன்மைக்காக, ஊர் பொதுமக்கள் அனைவரும், திருப்பதிக்கு புனித யாத்திøரை செல்வது தொன்று தொட்டு நடந்து வருகிறது. தங்களது முன்னோர் ஆரம்பித்து வைத்த, மார்கழி வழிபாடு மற்றும் திருப்பதிக்கு செல்லும் புனித யாத்திரையை, அவர்களது, வாரிசுகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. உலக நன்மைக்காக, வழக்கம் போல், இந்தாண்டும், இலக்கியம்பட்டி பொதுமக்கள், மார்கழி முதல் தேதி முதல், திருப்பாவை, திருவெம்பாவை பாடி வந்தனர். நேற்று காலை ஊர் மக்கள், திருப்பதி வெங்கடாஜலபதி பாராயணம் பாடிய படி, ஊர்வலமாக சென்றனர். முக்கிய நிகழ்ச்சியான, திருப்பதி புனித யாத்திரைக்கு, 10 பஸ்கள், 7 வேன்கள் உட்பட, 25க்கும் மேற்பட்ட, வாகனங்களில், புனித யாத்திரைக்கு நேற்று மாலை புறப்பட்டனர். இதனால், இலக்கியம்பட்டி முக்கிய வீதிகள் பொதுமக்கள் இன்றி, வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து, தர்மபுரி டவுன் போலீஸார் இப்பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.