ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் பக்தர் ஒருவர், ஃபாஸ்ட் டிராக் வாட்ச்சை நேர்த்திக்கடனாக செலுத்தியது தெரியவந்தது. ஈரோட்டில் கோட்டை பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், வாரணாம்பிகை கோவில் ஆகிய கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இக்கோவில் உண்டியல்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை திறக்கப்படும். நேற்று, கோட்டை கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி ரங்கநாதர் கோவில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டன. அறநிலையத்துறை உதவி ஆணையர் தனபால் தலைமையில், ஆய்வாளர் ஜெயமணி உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோட்டை கபாலீஸ்வரர் கோவில் உண்டியலில் 78 லட்சத்து 797 ரூபாய் காணிக்கை பணம் இருந்தது. கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் உண்டியலில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 703 ரூபாய் இருந்தது. அத்துடன், பக்தர் ஒருவர் நேர்த்திக் கடனாக செலுத்திய, ஃபாஸ்ட் டிராக் வாட்சும் இருந்தது. "பக்தர் செலுத்திய கடிகாரம், ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.