பதிவு செய்த நாள்
06
ஜன
2015
12:01
தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகளின், 168வது மஹோத்ஸவம் விழா, இன்று மாலை துவங்குகிறது. தொடர்ந்து, 10ம் தேதியன்று, பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிக்கு, ஆண்டுதோறும், தஞ்சை மாவட்டம் திருவையாறில், மஹோத்ஸவம் விழா நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, 168வது மஹோத்ஸவம் விழா, இன்று மாலை, 6 மணிக்கு துவங்குகிறது. விழாவுக்கு, தியாக பிரம்ம மஹோத்சவ சபா தலைவர் ரங்கசாமி மூப்பனார் தலைமை வகிக்கிறார். அறங்காவலர் குழு தலைவரும், த.மா.கா தலைவருமான வாசன், தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி, விழாவை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, 7 மணிக்கு டி.என்.சேஷகோபாலன் பாடுகிறார். 7.20 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் ஜேசுதாஸ் பாடுகிறார். 7.40 மணிக்கு கணேஷ், குமரேஷ் குழுவினரின் வயலின் நிகழ்ச்சி நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்தின கீர்த்தனை, 10ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 8.30 மணிக்கு, திருவையாறில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்ச விருத்தி பஜனை ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலம், விழா பந்தலை அடைந்தவுடன், ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக் கலைஞர்கள், பாடகர்கள், ஒரே குரலில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி, தியாகராஜ ஸ்வாமிக்கு, இசை அஞ்சலி செலுத்துகின்றனர். விழாவில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த இசை கலைஞர்களும், நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.