பதிவு செய்த நாள்
06
ஜன
2015
12:01
கோவை : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற ஆருத்ராதரிசன விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தில் துவங்கி, திருவாதிரையில் இவ்விழா நிறைவடையும். இப்பத்து நாட்களுக்கு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, காலை, மாலை இரு வேளைகளிலும் ஓதுவா மூர்த்திகளால் பாடப்படும். ஒவ்வொரு பாடலுக்கும், மங்கள பொருட்களால் சுவாமிக்கு பூஜை செய்யப்படும்.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஓதுவா மூர்த்திகளால் திருவெம்பாவை பாராயணம் செய்யப்பட்டது. பத்தாவது நாளான நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, நடராஜபெருமானுக்கு, பால், தயிர், வெண்ணெய், சந்தனம், விபூதி, இளநீர் உள்ளிட்ட 16 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோபூஜை, மகாதீபாராதனை நடந்தது. இதையடுத்து, புஷ்பங்களால் நடராஜபெருமான் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளி சப்பரத்திலும், சிவகாமி அம்பாள் தங்க சப்பரத்திலும் எழுந்தருளுவிக்கப்பட்டனர். அதன் பின்பு நான்கு மாட வீதிகளில் மேள, தாளங்களோடு பக்தர்களால், சுவாமி திருவீதி உலா அழைத்துச் செல்லப்பட்டார்.பக்தர்களுக்கு மார்கழி களி பிரசாதமாக வழங்கப்பட்டது. வழக்கமான அன்னதானத்தை தவிர்த்து, நேற்று சிறப்பு அன்னதானம் பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.