மேட்டுப்பாளையம்: காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலிலும், மேட்டுப்பாளையம் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலிலும் ஆருத்ரா தரிசனம் விழா கொண்டாடப்பட்டது. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் காலை 5:00 மணிக்கு நடை திறந்து, சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜை செய்யப்பட்டது. பின், லோகநாயகி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் விழா நடந்தது. வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மையார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. பின், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு மாங்கல்ய தாலி கயிறு, வளையல் ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்கள் திருச்சங்கத்தினர் செய்திருந்தனர்.