பதிவு செய்த நாள்
08
ஜன
2015
11:01
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில், பக்தர்கள் குளிக்க புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆண், பெண் மற்றும் பொது என, மூன்று தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பர். இதற்காக, இங்குள்ள ஹிருதாபநாசினி என்றழைக்கப்படும் கோவில் குளத்தில், பக்தர்கள் குளிப்பது வழக்கம். ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில், முழுவதும் தண்ணீர் நிரப்பும் வகையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி, ஆறு மாதங்களாக நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவில் குளத்தை சுற்றிலும், மூன்று பிரமாண்டமான தொட்டிகள் கட்டப்படுகின்றன. இதுகுறித்து, கோவில் கவுரவ ஏஜன்ட் சம்பத் கூறுகையில், “பக்தர்கள் குளிப்பதற்காக, ஆண்கள், பெண்கள் மற்றும் பொது என, மூன்று தொட்டிகள் கட்டப்படுகின்றன. இ ப்பணி ஆறு மாதங்களில் முடிவடையும். பணி முடிவடைந்ததும், தொட்டிகளுக்கும், குளத்தின் நடுவில் உள்ள பகுதிக்கும் தடுப்பு ஏற்படுத்தப்படும். அதன் பின், பக்தர்கள் இந்த தொட்டியில் குளித்து, ஆடை மாற்றிக் கொள்ளலாம்,” என்றார்.