பதிவு செய்த நாள்
13
ஜன
2015
11:01
திருச்சி: தெய்வ வழிபாட்டின் வெளிப்பாடாகத் தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது; இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என, காளைகளை வளர்ப்போர் உருக்கத்துடன் தெரிவிக்கின்றனர். திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் செவந்தலிங்கம், ராஜ்குமார், மலையாண்டி ஆகியோர் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு ஏன்?: கிராமத்தில் நடக்கும் விழாவுக்கு, பல பகுதி மக்கள் வந்து செல்லும் போது நல்லிணக்கம் ஏற்படும்; அதன் மூலம் கிராம மக்கள் வாழ்க்கை மேம்படும் என்பதற்காக, ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டது. வீட்டில் வளர்க்கும் காளைகளை, வீட்டில் ஒருவராகவும், தெய்வமாகவும் கருதும் நிலை தான் இன்று வரை உள்ளது. பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு, கோவிலுக்கு நேர்ந்து வழங்கப்பட்ட காளைகளையும், வீட்டில் தெய்வ வழிபாட்டுக்கென வளர்க்கும் காளைகளையும் தான் பயன்படுத்துகின்றனர்.
தெய்வ வழிபாடு: கோவில் காளைகள் ஊர் மக்கள் சார்பில் பராமரிக்கப்பதோடு, திருவிழா காலங்களில் மாலை மரியாதையுடன் வழிபடுகின்றனர். கிராமங்களில், பொங்கல் பண்டிகையின் போது கிராம கோவில்களின் தெய்வ வழிபாடாகத் தான், மஞ்சுவிரட்டு (ஜல்லிக்கட்டு) நடத்தப்பட்டது. அதில் காளைகளை துன்புறுத்த வாய்ப்பு இல்லை. வீடுகளில் வளர்க்கப்படும் காளைகளும், கோவில் காளைகளும் இறந்தால், அதை தோட்டத்து நிலங்களிலோ, கோவில் அருகிலோ அடக்கம் செய்து, சிலை வைத்து வழிபடும் வழக்கமும் நம்மிடையே உள்ளது.
தடையை விலக்க வேண்டும்: கேளிக்கை, சூதாட்டங்களை போல் இல்லாமல், தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, நீதிமன்றம் விதித்துள்ள தடையை விலக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.