சபரிமலை: சபரிமலையில் இன்று மகரவிளக்கு பெருவிழா நடக்கிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கிய பூஜையான மகரசங்கரமபூஜை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஜோதி தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் காத்திருக்கின்றனர். உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரணபவனி இன்று மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வந்தடையும். இங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும். மாலை 6.20 மணிக்கு 18 படி வழியாக சோபானத்தில் வந்ததும், தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து சிலைக்கு ஆபரணங்கள் அணிவிப்பர். நடைதிறந்து தீபாராதனை நடைபெறும். தீபாராதனை முடிந்து சில நிமிடங்களில் பொன்னம்பலமேட்டில் மகரநட்சத்திரம் தொடர்ந்து மூன்று முறை காட்சிதரும். மகரவிளக்கு நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகரசங்கரமபூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் ஐயப்பனின் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும் நெய் திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்துவிடப்படுகிறது. நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த பூஜை இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இரண்டு நாட்களாக பக்தர்களில் பெரும்பகுதியினர் ஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தை சுற்றியுள்ள காடுகளில் தார்பாய், மரக்கிளைகளால் தற்காலிக ஷெட்டுகள் அமைத்து தங்கியுள்ளனர். புல்மேட்டில் 2009ல் நடந்த கோரவிபத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் கவனமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏ.டி.ஜி.பி., பத்மகுமார் சன்னிதானத்தில் முகாமிட்டுள்ளார். கட்டடங்கள், மரங்கள் மற்றும் மலைச்சரிவுகளில் பக்தர்கள் நின்று ஜோதி தரிசனம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட இடங்களில் மூங்கில் கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று பகல் 12 மணி முதல் வடசேரிக்கரையில் இருந்து வாகனங்கள் பம்பைக்கு அனுமதிக்கப்படமாட்டாது. மகரவிளக்கு முடிந்து பம்பையிருந்து வாகனங்கள் திரும்பி செல்லும் எண்ணிக்கையை பொறுத்து பம்பைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோல பம்பையில் இருந்து மதியத்துக்கு பின்னர் பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மகரவிளக்குக்கு முன்னோடியாக பிம்பசுத்தி பூஜை நேற்று உச்சபூஜைக்கு முன்னர் நடந்தது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி இந்த பூஜையை நடத்தினர்.