ஒருசமயம் துர்வாச முனிவர் குந்திபோஜனின் அரண்மனைக்கு வந்திருந்தார். சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள இருந்த அவருக்கு பணிவிடை செய்ய தன் மகள் குந்தியைப் பணித்தான் குந்திபோஜன். இளவரசி குந்தியும் முனிவருக்கு பணிவிடைகளை முறையாகச் செய்து அவரது ஆசியைப் பெற்றாள். முக்காலமும் உணர்ந்த முனிவரான துர்வாசர், வருங்காலத்தில் குந்தியின் கணவன் பாண்டுவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதை ஞானதிருஷ்டியால் அறிந்தார். அதனால், மகப்பேறு அளிக்கும் புத்திரலாபம் என்னும் மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார். குந்தி அம்மந்திரத்தின் தன்மையை சோதித்துப் பார்க்க விரும்பினாள். கண் கண்ட தெய்வமான சூரியதேவனை மனதில் எண்ணி அந்த மந்திரத்தை ஜெபித்தாள். அவள் முன் சூரியன் நேரில் தோன்றி, அவருடைய அம்சமாக ஆண்குழந்தையை அளித்துவிட்டுத் திரும்பினார். அப்பிள்ளையே கர்ணன். சூரியனின் மகனாகிய இப்பிள்ளையே, வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதபடி தானம் செய்தவன். கொடைவள்ளல் என்று போற்றப்பட்டவன். குழந்தை இல்லாத தம்பதியர்,இந்த பொங்கல் முதல் அடுத்த பொங்கல் வரை தொடர்ந்து சூரியோதய வேளையில் வழிபாடு செய்தால், குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. இதற்காக விரத நியமங்கள் எதுவும் தேவையில்லை.