பதிவு செய்த நாள்
15
ஜூன்
2011
10:06
மதுரை: இன்று முழுமையான சந்திர கிரகணம், பவுர்ணமி திதியான கேட்டை நட்சத்திரம் நான்காம் பாதத்தில், விருச்சிக ராசியில் ஏற்படுகிறது. தர்ம சாஸ்திரப்படி, தர்ப்பணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11.52 மணிக்கு துவங்கி, அதிகாலை 3.32க்கு முடிகிறது. பவுர்ணமி திதியில் துவங்கும் கிரகணம், பிரதமையில் விலகுகிறது. மதியம் 2.30 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது. கிரகண அதிபதியாக சந்திரன் வருவதால் எங்கும் சூறாவளிக் காற்று, நல்ல மழை ஏற்படும். ஆயில்யம், அனுஷம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரத்தினர், விருச்சிக ராசியினர், சாந்தி பரிகாரமாக, புதன் கிழமை, ஆலய வழிபாடு மேற்கொள்ளவேண்டும். கர்ப்பமான பெண்கள், சந்திரனை பார்ப்பது கூடாது. கிரகணம் முடிந்த பின், சந்திர தரிசனம் செய்யவேண்டும். இன்று கிரகண தர்ப்பணம் செய்யலாம் என்று கூடல்நகர் வரசித்தி விநாயகர் கோவில் பாஸ்கர வாத்தியார் தெரிவித்தார்.
மீனாட்சி கோயில் அடைப்பு :மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் அறிக்கை : இன்று சந்திரகிரகணத்தையொட்டி சாயரட்சைகால பூஜை முடிந்து, இரவு 7 மணிக்கு அம்மன், சுவாமி மூலஸ்தான பலகணி கதவுகள் சாத்தப்படும். இந்நேரத்தில் தரிசனமோ, அர்ச்சனை டிக்கெட்டுகளோ கிடையாது.சந்திரகிரகணம் இரவு 11.50 மணிக்கு ஆரம்பித்து இரவு 1.42 மணிக்கு மத்திம காலத்தில் தீர்த்தம் மற்றும் கிரகண கால அபிஷேகம் நடக்கும். அதிகாலை 3.34 மணிக்கு கிரகணம் முடிந்தபின், அர்த்தஜாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜை நடக்கும். பின், வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு திருவனந்தல் பூஜை நடக்கும், என தெரிவித்துள்ளார்.