திருவந்திபுரம் தேவநாத சுவாமி மஞ்சு விரட்டும் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2015 12:01
கடலூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாத சுவாமி வெள்ளிக் குதிரை வாகனத்தில் கெடிலம் ஆற்றில் எழுந்தருளி, பாரிவேட்டை அடித்து மஞ்சு விரட்டு உற்சவம் கோலாகலமாக நடந்தது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான நேற்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி திருவந்திபுரம் தேவநாத சவாமி கோவிலில் நேற்று காலை ஆண்டாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் தாயார் புறப்பாடாகி, கோவில் வாசல்படி அருகில் கனு தீர்த்தவாரி நடந்தது. மாலை 5:30 மணிக்கு தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குதிரையில் புறப்பாடாகி கெடிலம் ஆற்றுக்கு வந்து, அங்கு தொட்டி, பில்லாலி, திருவந்திபுரம் மற்றும் சாலைக்கரை கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த மாடுகள் முன் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து தேவநாத சுவாமி பாரிவேட்டை அடித்து மாடுகளை விரட்டும் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.