பதிவு செய்த நாள்
15
ஜூன்
2011
11:06
திருநெல்வேலி : சீவலப்பேரி காசிவிஸ்வநாதர் (சிவன்) கோயிலில் வரும் 19ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. சீவலப்பேரியில் பழமைவாய்ந்த விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து பக்தர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று சிருங்கேரிமடம் சார்பில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும் 17ம் தேதி காலை மகா கணபதிஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, மகாலெட்சுமி ஹோமம், வாஸ்துசாந்தி ஹோமம், சுதர்ஸன ஹோமம், மகா பூர்ணாஹூதி நடக்கிறது. 18ம் தேதி அஸ்த்ர ஹோமம், மூர்த்திஹோமம், திக் ஹோமம், பஞ்ச கவ்ய பூஜை, அன்று மாலை தீர்த்தம் எடுத்து வருதல், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், இரவு 7 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் யாகசாலை பூஜை நடக்கிறது. 19ம் தேதி காலை 6 மணிக்கு ஸோம கும்ப பூஜை, மண்டப பூஜை, சூர்ய பூஜை, சுவாமி, அம்பாள் காப்பு கட்டுதல், இரண்டாம் கால யாகசாலை பூஜை, திருமுறை விண்ணப்பம், யாத்ரா ஹோமம் நடக்கிறது. காலை 10.40 மணிக்கு வேதமந்திரங்கள், மேளதாளம், பஞ்சவாத்யம் முழங்க கும்பம் புறப்பாடு நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகமும், 12 மணிக்கு சுவாமி, அம்பாள் கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம், தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் திருவீதியுலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில் இணை ஆணையர் புகழேந்திரன், துணை ஆணையர் முத்துதியாகராஜன், உதவிஆணையர் பொன்.சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், சிருங்கேரிமடம் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் வி.ஆர்.கவுரிசங்கர் மற்றும் சீவலப்பேரி காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் பக்தர் பேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர்.
பக்தர்களுக்கு அழைப்பு : கும்பாபிஷேக விழாவிற்கு தேவையான பூஜைப் பொருட்களான ஹோம சாமான்கள், அபிஷேக பொருட்கள், பால், தயிர், இளநீர், நெய், சூடன், பத்தி, பூக்கள் போன்ற பொருட்களை பக்தர்கள் உபயமாக வழங்கலாம் என திருப்பணிக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து மேலும் விபரம் அறிய கணேசன் 97905-40899, காசிவிஸ்வநாதன் 94431-57065 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.