பதிவு செய்த நாள்
15
ஜூன்
2011
11:06
திருநெல்வேலி : தென் காளகஸ்தி நவ கையிலாய கோயிலில் ராகு ஸ்தலமான சங்காணி கோத பரமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா பல ஆண்டுகளுக்கு பிறகு வரும் 19ம் தேதி நடக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நவ கையிலாய கோயில்கள் அமைந்துள்ளன. இதில் குன்னத்தூர் சங்காணியில் நவ கையிலாயத்தில் ஒன்றான ராகுஸ்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் "தென் காளகஸ்தி எனவும் போற்றப்படுகிறது. மூவலர் கோதபரமேஸ்வரராகவும், அம்பாள் சிவகாமி அம்பாளாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்கு பல ஆண்டுகளுக்கு பிறகு சிருங்கேரி மடம் சார்பில் பல லட்ச ரூபாய் செலவில் உபயத் திருப்பணி வேலைகள் கடந்த 2 ஆண்டாக நடந்துவந்தது. கோயில் சுவாமி விமானம், அம்பாள் விமானம், விநாயகர், ஆறுமுகநயினார் சன்னதி சீரமைத்தல், விமானம் கட்டுமானப்பணி, தட்சிணாமூர்த்தி சன்னதி அமைத்தல், மடப்பள்ளி சீரமைத்தல், பைரவர் சன்னதி சீரமைப்பு, பிரகாரம் சீரமைத்தல் போன்ற பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்தது. இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும் 17ம் தேதி கணபதிஹோமத்துடன் துவங்குகிறது. மாலையில் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. 19ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. அன்று காலை 7 மணிக் யாகசாலை பூஜை, ஹோமம், ஸ்பர்ஸாஹூதி, நாடி சந்தானம், மகாபூர்ணாஹூதி, யாகசாலை தீபாராதனை நடக்கிறது. காலை 10.45 மணிக்கு சுவாமி, அம்பாள் விமானங்களுக்கு கும்பாபிஷேகமும், சுவாமி, அம்பாளுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து மகாபிஷேகமும், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன், துணை ஆணையர் முத்துதியாகராஜன், உதவிஆணையர் பொன்.சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். பக்தர்கள் உதவ அழைப்பு கும்பாபிஷேக விழாவிற்கு தேவையான ஹோம சாமான்கள், நெய், அபிஷேக பால், தயிர், மஞ்சள்பொடி, திரவியங்கள், சூடன், பத்தி, அன்னதானத்திற்கு தேவையான பலசரக்கு சாமான்கள், காய்கறிகளை பக்தர்கள் வழங்கலாம் என பக்தர்களுக்கு திருப்பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது. ஏற்பாடுகளை சிருங்கேரிமடம் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் வி.ஆர்.கவுரிசங்கர், கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர். இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் காசிவிஸ்வநாதன் 94431-57065, சீனிவாசன் 98421-64100 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.