கும்பகோணம்: பட்டீஸ்வரத்தில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருஞான சம்பந்தர்க்கு திருமுலைப்பால் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள பட்டீஸ்வத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர்கோயிலில் ஒவ்வொரு வைகாசி மாதத்தை முன்னிட்டும் பிரம்மோற்சவம் விழா 13 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நேற்று திருஞானசம்பந்தர்க்கு திருமுலைப்பால் கொடுக்கும் நிகழ்ச்சி காலையில் நடந்தது. சிறுகுழந்தையாக இருந்தபோது தந்தையுடன் வந்த திருஞானசம்பந்தர், ஆற்றில் குளிக்க சென்ற தந்தை நேரம் கடந்தும் வராததன் காரணமாக திருஞானசம்பந்தர் பசி தாங்காமல் அழும்போது, அவருக்கு பசியை போக்க ஞானவாவியில் திருமுலைப்பால் அளித்ததாக வரலாறு. அந்த நாளின் நினைவாக நேற்று பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் திருமுலைப்பால் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கும்பகோணத்தை சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து அடியார்கள் பலர் சிவனை போற்றி பாடல்கள் பாடி வழிப்பட்டனர். இதைத்தொடர்ந்து, திருஞான சம்பந்தர்க்கு முத்துக்கொண்டை, முத்துகொடை, முத்துசின்னங்கள் அளித்து படிச்சட்டத்தில் வீதிவலம் வரும் நிகழ்ச்சி இன்று (15ம் தேதி) காலை 9 மணிக்கு நடக்கிறது.