பதிவு செய்த நாள்
21
ஜன
2015
12:01
பெத்தநாயக்கன்பாளையம் : ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி கிராமத்தில், தை அமாவாசை முன்னிட்டு சன்னாசி வரதபெருமாள் கோவிலில் நடந்த தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி கிராமத்தில் உள்ள, மலை அடிவாரத்தில், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீஞாலகிரி சன்னாசி வரதன், வேணுகோபால் ஸ்வாமி கோவில்கள் உள்ளன. இங்கு, சித்தராக வாழ்ந்த சன்னாசி வரதன், "தை அமாவாசை நாளில் தான், ஜீவசமாதி அடைந்தார். இதையடுத்து, பெத்தநாயக்கன்பாளையம், தளவாய்ப்பட்டி, ஓலப்பாடி உள்பட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சன்னாசி வரதன், வேணுகோபால் ஸ்வாமிக்கு கோவில் அமைத்து, தை அமாவாசையில் தேர்த்திருவிழாவை நடத்தி வருகின்றனர்.தை அமாவசை நாளான, நேற்று, மாலை, 3.30 மணியளவில் சன்னாசி வரதன் ஸ்வாமி, வேணுகோபால் ஸ்வாமியின் இரண்டு தேர்களை, விழாக் குழுவினர், பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இரண்டு தேர்களும் பக்தர்களின் கோவிந்தா.. கோவிந்தா... என்ற கரகோஷம் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்தன. மாலை, 6 மணியளவில், தேர் கோவில் வளாகத்தை வந்தடைந்தது.
அப்போது, சன்னாசி வரதன், வேணுகோபால் ஸ்வாமி, ராதா, ருக்குமணி, கிருஷ்ணன், சிங்க முக ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட ஸ்வாமிகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், மல்லியக்கரை, தம்மம்பட்டி, ராசிபுரம், தலைவாசல், வீரகனூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தளவாய்பட்டி நண்பர்கள் குழு சார்பில், 7,000 பக்தர்களுக்கும், பக்தர்கள் குழு சார்பில், 15 ஆயிரம் பேர் என, மொத்தம் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது.