பதிவு செய்த நாள்
22
ஜன
2015
11:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் வனபோஜன உற்சவத்தில், நேற்று களக்காட்டூர் பகுதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் வனபோஜனம் உற்சவம், ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, நேற்று காலை கோவிலில் இருந்து, ஸ்ரீதேவி பூதேவியருடன் புறப்பட்ட வரதராஜ பெருமாள், களக்காட்டூரில் உள்ள மரகதவல்லி சமேத கரிய மாணிக்க வரதர் கோவிலில் காலை 9:00 மணியளவில் எழுந்தருளினார். அங்கு வரதராஜ பெருமாளுக்கு, கிராம பக்தர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, கிராமத் தெருக்களில் வலம் வந்து பகுதிவாசிகளுக்கு வரதராஜர் அருள்பாலித்தார். வீடுகள்தோறும் தேங்காய் உடைத்து பகுதிவாசிகள், சுவாமியை சேவித்தனர். இதை தொடர்ந்து, மதியம் 1:00 மணியளவில், பாலாற்றில் எழுந்தருளிய வரதராஜருக்கு, அங்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், அங்கிருந்து ஓரிக்கை சின்ன ஐயங்குளம், அண்ணா குடியிருப்பு வழியாக தேசிகர் கோவிலுக்கு சென்றார். அங்கு மரியாதை அளிக்கப்பட்ட பின் இரவு 8:00 மணி அளவில் கோவிலை சென்றடைந்தார்.