Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » குருலிங்க சுவாமிகள்
குருலிங்க சுவாமிகள் - சைதாப்பேட்டை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜன
2015
03:01

கோயில்களும் அதிஷ்டானங்களும் கோலோச்சும் சென்னை மாநகரத்தில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு வெகு அருகே - தண்டவாளத்தை ஒட்டி, காரணீஸ்வரர் கோயில் தெருவில் ஜீவ சமாதி கொண்டிருக்கிறார் மகான் ஸ்ரீகுருலிங்க சுவாமிகள். இவர் இங்கே சமாதி ஆனது-கி.பி.1887-ஆம் வருடம். ஜீவன் முக்தி அடைந்து சுமார் நூற்றாண்டுகள் கடந்தும், இன்றைக்கும் தன் பக்தர்களுக்குத் தேவைப்பட்ட வேளையில் காட்சி தந்தும், கனவில் பேசியும், தியானத்தில் தோன்றியும் அருளி வருகிறார். குருலிங்க சுவாமிகள். குருலிங்க சுவாமிகள் யார்? எப்போது பிறந்தார்? பெற்றோர் யார்? அடுத்தடுத்த கேள்விகள் உங்கள் மனதுக்குள் எழுகின்றனவா? எழத்தான் செய்யும். எந்த ஒரு மனிதர் நமக்கு அறிமுகம் ஆனாலும் அவரது பூர்வாஸ்ரமத்தைத் தெரிந்து கொள்வதில் இருக்கிற ஆவலே தனிதான். ஆனால், பல மகான்களது வாழ்க்கையில் ஆதியைத் தேட முடியாது. அந்தம் மட்டும்தான் அறிய முடியும். அதுவே குருபூஜை என்கிற பந்தம். குருபூஜையின் மூலம்தான் அவர்களை நாம் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

மானுட வாழ்க்கையில் ஒருவரின் பிறப்பை உடனுக்குடன் பதிவு செய்வது என்பது. லவுகீகமான விஷயத்துக்காக. அறிவை வளர்க்கும் கல்வியைக் கற்றுத் தேர்வதற்கு ஆரம்பத்தில் பிறப்புச் சான்றிதழ் தேவை. காரணம் போலிகள் எப்படியாவது புகுந்து விடுவார்கள் என்பதால் பணம் சேர்த்துப் படாடோபமாக வாழ ஆசைப்படும் மனிதன். அதற்கான ஒரு பணியில் சேர்வதற்கும் பிறப்புச் சான்றிதழைப் பார்த்து உறுதி செய்து கொள்வார்கள்; காரணம், பணம் இல்லை என்றால், புவியில் எதுவுமே இல்லை.

ஆனால், மகான்களுக்கு பள்ளியும் தேவை இல்லை; பணியும் தேவை இல்லை; இறைவன் நடத்தும் ஆன்மிகப் பள்ளிக்கூடத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் இவர்கள். இறைவன் தங்களுக்கு இட்ட பணியை இன்முகத்துடன் பூர்த்தி செய்பவர்கள். எனவே, அவர்களது பிறப்பு எங்கே பெற்றோர் யார் போன்ற விஷயங்களை ஆராய்வதில் அலைச்சல்தான் மிஞ்சும். குருலிங்க சுவாமிகளும் அப்படித்தான். எப்போது பிறந்தார், எங்கே வளர்ந்தார் என்கிற எந்தத் தகவலும் இதுவரை அவரது பக்தர்களால் அறியப்பட முடியவில்லை. விருத்தாசலத்தில் பிறந்தவர் சுவாமிகள் என்பது அவரது பக்தர்களின் கூற்று. கன்னட தேசத்திலே விப்பிரர் குலத்திலே அவதரித்தவர் இவர் என்பது சைதாப்பேட்டை ஸ்ரீகாரணீஸ்வரர் கோயில் தல வரலாற்றுக் குறிப்பு. எது உண்மை என்கிற ஆராய்ச்சிக்குள் நாம் போக வேண்டாம்.

பிறந்ததில் இருந்தே மாபெரும் சிவபக்தராகத் திகழ்ந்தார் சுவாமிகள். ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிவன்கோயில்களுக்குச் சென்று அங்கு உறையும் லிங்கத் திருமேனியை தரிசித்தபடி யாத்திரையாக வந்து கொண்டிருந்தவர். இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான்-சைதாப்பேட்டை. திருக்காரணி எனப்படும். சைதாப்பேட்டையில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீகாரணீஸ்வரரைத் தரிசித்தார். இந்தத் திருத்தலத்தின் அழகும், கோயிலின் அமைப்பும் அவரது மனதைக் கொள்ளை கொண்டு விட்டதால், இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார் என்று கூறப்படுகிறது. அனுதினமும் காரணீஸ்வரரைத் தொழுவதைத் தன் வழக்கமாகக் கொண்டார். தாங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு சித்த புருஷர் குடி கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த சென்னை நகரத்து மக்கள், இவர் இருந்து வரும் இடத்துக்கு வந்து தங்கள் பிணிகளைச் சொல்லி, விபூதிப் பிரசாதம் பெற்றுச் செல்வார்கள். சிறந்த சிவ பக்தர் என்பதால், இவரது இடது திருக்கரத்தில் அவ்வப்போது லிங்கத் திருமேனிகள் திடீர் திடீரென்று தோன்றும். முற்றிய சிவ பக்தியின் காரணமாக அந்த ஆதி சிவனே இந்த வரத்தை சுவாமிகளுக்கு அருளி இருந்தார். இத்தகைய சிவலிங்கங்களை, தன்னை ஆத்மார்த்தமாகத் தரிசிக்க வரும் சில பக்தர்களுக்கும் கொடுத்திருக்கிறார்.

சுவாமிகளின் இடைப்பட்ட காலங்களில் அவர் எங்கெங்கு பயணித்தார். என்னென்ன அருளாடல்கள் நிகழ்த்தினார் என்பது சரிவர அறியபடவில்லை. அதற்குண்டான பதிவுகள் எதுவும் இல்லை. அவ்வளவு ஏன்... சுவாமிகளின் ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை. காலங்கள் உருண்டோடின. தன் மனத்துக்கு மிகவும் பிடித்த ஸ்ரீகாரணீஸ்வரர் சன்னிதியிலேயே தான் ஜீவ சமாதி ஆக வேண்டும் என்று தீர்மானித்தார் சுவாமிகள். சைதாப்பேட்டைப் பகுதியில் வசித்து வரும் செல்வந்தர் ஒருவரிடம், தான் ஜீவ சமாதி அடைவதற்கான இடத்தைத் தருமாறு அணுகினார். சுவாமிகளுக்கு இடம் தருவதற்கான வசதி அந்த செல்வந்தருக்கு இருந்தும், சுவாமிகளின் மகத்துவம் புரியாமல், ஏளனம் செய்து அனுப்பி விட்டார் செல்வந்தர். சுவாமிகளும் வேறு ஏதும் பேசாமல் அங்கிருந்து புற்பபட்டு சைதைப் பகுதியில் அடையாறு ஆற்றங்கரைக்கு (இன்றைக்கு கூவம்) வந்தார். தெள்ளிய நதியாக ஓடிக் கொண்டிருக்கும் அதன் கரையில் ஆழ்ந்த நிஷ்டையில் அமர்ந்தார். அதே நேரத்தில் செல்வந்தரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் திடீரென கடுமையான வயிற்று வலி வந்து, பெரும் அவஸ்தைக்கு உள்ளானார்கள்.

திடீரென ஏன் இப்படி குடும்பத்தில் எல்லோருக்கும் வயிற்று வலி வந்துள்ளது? என்று திகைத்த அந்த செல்வந்தரும், குடும்பத்தினரோடு சென்று வைத்தியரை அணுகி அனைவருக்கும் சிகிச்சை செய்தார். வைத்தியத்துக்குப் பணம் விரயம் ஆனதே தவிர, குணம் ஏற்படவில்லை. செல்வந்தரின் வீட்டில் பணி புரிந்து வந்த வேலைக்காரன் ஒருவன், குருலிங்க சுவாமிகளின் அருமை-பெருமை அறிந்தவன். சுவாமிகள் ஜீவ சமாதி ஆவதற்கு இடம் தராததால்தான் அவரது குடும்பம் இப்படி வலியால் துடிக்கிறது? என்பதை யூகித்தவன், சுவாமிகளைத் தேடி அடையாறு ஆற்றங்கரைக்கே வந்தான். தன் முதலாளியான செல்வந்தார் குடும்பத்தின் தற்போதைய நிலையைச் சொல்லி அழுதான். அவர்களை எப்படியாவது இந்த உபாதையில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினான். அந்தக் குடும்பத்தினரை மன்னித்து அருளுமாறு கதறினான்.

வேலைக்காரன் கையில் ஒரு சொம்பைக் கொடுத்து ஆற்றங்கரையில் இருந்து நீர் எடுத்து வருமாறு அவனைப் பணித்தார் சுவாமிகள். அரக்கப் பரக்க எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். அந்த நீரில் சிறிது விபூதி தெளித்து. இதைக் கொண்டு போய் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் குடிக்கச் சொல் என்ற சுவாமிகள், நிஷ்டைக்குள் போய் விட்டார். சுவாமிகளின் அருளாசி பட்ட தீர்த்தத்துடன், தன் முதலாளியின் வீட்டுக்கு ஓடினான். வேலைக்காரன். சுவாமிகளை அவமதித்து அனுப்பிய விவரத்தையும். அதனால்தான் இந்த சங்கடங்கள் வந்தது என்றும் சொன்னான். சுவாமிகளிடம் இருந்து தான் கொண்டு வந்த தீர்த்தத்தைக் கொடுத்து அனைவரையும் உட்கொள்ளச் சொன்னான். ஏராளமான சிகிச்சைகளைச் செய்தும் பலன் இல்லாமல் இருந்த அவர்கள். இதைக் குடித்தாலாவது நம் வயிற்று வலி தீராதா? என்று பயபக்தியுடன் அதை உட்கொண்டனர். என்னே ஆச்சரியம்?

அதை அருந்திய அடுத்த கணமே அனைவரது வயிற்று வலியும் பறந்தோடி விட்டது. செல்வந்தர் உட்பட குடும்பத்தில் இருந்த எல்லோரும் ஒரு புத்துணர்வு பெற்றதைப் போல் ஆனார்கள். செல்வந்தருக்கு இதன் பிறகுதான் சுவாமிகளின் மகத்துவம் புரிந்தது. சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும் அடையாறு ஆற்றங்கரைக்கு. குடும்பத்தினரைக் கூட்டிக் கொண்டு ஓடினார். அவரது திருப்பாதங்களில் அனைவரும் வீழ்ந்து நமஸ்கரித்தனர். கண்களில் நீர் மல்க, என்னை மன்னித்து அருளுங்கள் என்று கதறினார் செல்வந்தர். அதோடு சுவாமிகள் ஜீவ சமாதி ஆவதற்கு உரிய இடத்தையும் தாராளமாகத் தான் தருவதாக வாக்குக் கொடுத்தார். தவிர, ஜீவ சமாதி ஆன பின் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளையும் தானே முன்னின்று செய்ய ஆரம்பித்தார் செல்வந்தர். அந்த இடம்தான் - இன்றைக்கு சுவாமிகளின் ஜீவ சமாதி இருக்கும் இடம். ஏராளமான இடத்தை அன்றைய தினத்தில் சுவாமிகளுக்கு அவர் வழங்கி இருந்தாலும், பல பகுதிகள் பின்னாட்களில் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. விளைவு - மகானின் ஜீவ சமாதி குறுகி விட்டது. 1887-ஆம் வருடம் கார்த்திகை மாதத்தில் நான்காவது திங்கட்கிழமை அன்று நள்ளிரவு வேளையில் தான் ஜீவ சமாதியில் அமரப் போவதாகத் தன் பக்தர்களிடம் முன்னரே தெரிவித்திருந்தார் சுவாமிகள். இத்தனை நாள் தங்களுக்கு அருளாசி வழங்கி காத்து வந்த மகான் ஜீவ சமாதி ஆகப் போகிறார் என்பதை அறிந்த அவரது பக்தர்கள் மீளாத் துயரில் ஆழ்ந்தனர். இருந்தாலும், யதார்த்தத்தை உணர்ந்தவர்கள். அந்த நிகழ்வைக் காண வேண்டும் என்பதற்காக் குவிந்தனர். இன்னும் சில மணி நேரத்திற்குள் தங்களிடம் இருந்து பிரியப் போகும் சுவாமிகளுக்காக அங்கே நமசிவாய கோஷமும், அன்னதானமும் குறைவில்லாமல் நடந்தது.

தான் ஜீவ சமாதி அடையும் முன், ஸ்ரீகாரணீஸ்வரர் கோயிலில் மூன்று முறை வலம் வந்தார். சுவாமிகள். அதன் பின் அங்கு கூடி இருக்கும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். நமசிவாய முழக்கம் எல்லா திசைகளிலும் எழுப்ப... நள்ளிரவு சரியாக 12 மணிக்கு சமாதிக்குள் இறங்கி, நிரந்தர நிஷ்டையில் ஐக்கியமானார் சுவாமிகள். பிறகு, சமாதி எழுப்பப்பட்டு சிவலிங்கத் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றே வழிபாடு துவங்கியது. சுவாமிகள் மீது மிகுந்த பக்தி கொண்ட சகுந்தலா அம்மையார் என்பவர். 40 வருடங்களுக்கும் மேலாக ஜீவ சமாதியைப் பராமரித்து வந்துள்ளார். அந்த அம்மையாரும் 2006-ஆம் ஆண்டு தனது 86-வது வயதில் சமாதி ஆகி விட்டார். இதன் பின் ஆத்ம விழிப்பு உணர்வு சபை அன்பார்கள். ஜீவ சமாதியை நிர்வகித்து வருகிறார்கள். இந்த சபையினரின் முயற்சியால் கடந்த 31.1.99 தைப்பூச தினத்தன்று ஜீவ சமாதி கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. சுவாமிகளின் அருளாசியோடு ஆத்ம விழிப்பு உணர்வு சபை அன்பர்கள் ஒத்துழைப்புடன் கும்பாபிஷேகமும் சமீபத்தில் நடந்து முடிந்தது.

சுவாமிகளின் குருபூஜை திருவிழா டிசம்பர் மாதம் - அதாவது சுவாமிகள் சமாதி ஆன கார்த்திகை மாத நான்காவது திங்கிட்கிழமை (சோமவாரம்) அன்று அனுஷ்டிக்கப்பட்டது. ஒவ்வொரு வருட குருபூஜையையும் மூன்று நாட்கள் கொண்டாடி வருகின்றனர் அவரது பக்தர்கள். குருபூஜை தினத்தன்று சுவாமிகளின் திருமேனிக்கு விசேஷ அபிஷேகம். ஆராதனை, அன்னதானம், சந்தனக் காப்பு அலங்காரம், வீதியுலா போன்றவையும் விமரிசையாக நடைபெறும். தன் பக்தர்களுக்கு, இன்றைக்கும் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்திக் காண்பித்துக் கொண்டிருக்கிறார் சுவாமிகள். இதைக் கண்கூடாக அனுபவித்து வருகிறார்கள் அவரது அருளாசிக்குப் பாத்திரமான பக்தர்கள். தங்கள் வீட்டில் திருமணம். குழந்தைப் பேறு இல்லாமை, பிரசவம் போன்ற நிகழ்வுகளின் போது - முன்னதாகவே சுவாமிகளின் சன்னிதிக்கு வந்து பிரார்த்தித்துச் செல்வது பக்தர்களின் வழக்கம்.  குருலிங்க சுவாமிகளின் பக்தர் ஒருவர் நம்மிடம் சொன்னார்; சுவாமிகளின் பக்தர்கள் இல்லத்தில் இருப்பவர்கள் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதி ஆகி இருந்தால், அந்தக் குடும்பத்துப் பெண்கள் அனைவரும் ஓர் அனுபவத்தை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்; உணர்ந்தும் வருகிறார்கள். அதாவது, சுவாமிகளின் அருட்பிரசாதமான விபூதி தங்கள் கைவசம் இல்லாவிட்டாலும். அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த பிரசவ வார்டுக்குள் திடீரென விபூதியின் மணம் குப்பென்று வீசும். விநாடி நேரத்தில் வரும் இந்த வாசனையை வைத்தே சுவாமிகளின் அருள் தங்களுக்கு அந்த நேரத்தில் கிடைத்து விட்டதாகப் பூரிப்பார்கள் பெண்கள், பிரசவமும் சுலபமாக நடந்தோறும். இதே போன்ற அனுபவம் என் மனைவி மற்றும் சகோதரியர், மகப்பேறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர்கள் உணர்ந்தாகப் பிற்பாடு என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.

சென்னை தவிர, பல வெளியூர்களிலும் உள்ள சுவாமிகளின் பக்தர்களும் இந்த அனுபவத்தை நம்மிடம் சொன்னது ஆச்சரியம். எந்த ஒரு பிரார்த்தனையாக இருந்தாலும் சரி.... தன் சன்னிதி தேடி வந்து மனமுருக பிரார்த்திக்கும் பக்தனை சுவாமிகள் ஏமாற்றுவதில்லை. அதுபோல் இண்டர்வியூ, ஸ்கூல் அட்மிஷன் போன்ற எந்த ஒரு நல்ல நிகழ்வுக்கும் முன்னால் சுவாமிகளின் சன்னிதிக்கு பூ, பழங்கள், ஊதுவத்தியோடு வந்து அவரது திருப்பாதம் பணிந்து வேண்டுகிறார்கள் பக்தர்கள். இன்னொரு அன்பர், சுவாமிகளின் அருளாசிக்குப் பாத்திரமான சென்னை ஆயிரம்விளக்கு அன்பரின் ஒருவரின் ஒன்றரை வயது குழந்தை முதல் மாடியில் இருந்து தவறி, கீழே விழுந்து விட்டது. குழந்தை அலறித் துடித்தது. சம்பவத்தைப் பார்த்து விட்டு. அந்த அன்பர், சுவாமிகளை மனமுருக வேண்டிக் கொண்டே பதைபதைப்புடன் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றார். குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், எல்லாம் நார்மலாகவே இருக்கிறது. குழந்தை தவறி விழுந்ததற்கான அடையாளம் எதுவுமே இல்லை. நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது ஏதோ ஒரு அபூர்வ சக்திதான் குழந்தையைக் தாங்கிப் பிடித்திருக்கிறது என்று தோன்றுகிறது என்றார்கள். இருந்த இடத்தில் இருந்து கொண்டே மகானை நினைந்து அவருக்கு நமஸ்காரம் செய்து விட்டுத்தான் வீடு திரும்பினார் அந்த அன்பர் என்றார் பிரமிப்புடன்.

சுவாமிகள் ஜீவ சமாதியைத் தரிசிப்போம்? காரணீஸ்வரர் கோயில் தெருவில் மிகவும் சிறு கோயிலாக இந்த ஜீவ சமாதி காட்சி தருகிறது. மேலே முகப்பு கோபுரத்தில் சுவாமிகள் சிறு சுதை உருவம். கருவறைக்கு விமானம் உண்டு. ஜீவ சமாதிக்குள் நுழைந்தவுடன் விநாயகர், முருகன், பலிபீடம், நந்திதேவர் ஆகியோரின் தரிசனம். இதைத் தாண்டியவுடன், நமக்கு இடப் பக்கம் ஸ்ரீராமலிங்க அடிகளாரின் ஒரு சுதை திருமேனி. வலப் பக்கம் பதினெட்டு சித்தர்களின் ஓவியங்கள். கருவறையில்-சுவாமிகள் உற்ஸவர் விக்கிரகம். லிங்கத் திருமேனி. சுவாமிகளின் கல் விக்கிரகம் என்று ஒன்றன் பின் ஒன்றாகக் காட்சி தருகிறது. ஆரம்ப காலத்தில் கோயில், சாலையில் இருந்து சற்று உயரமாகத்தான் இருந்தது. பின்னாட்களில் சாலை மட்டம் ஏற ஏற, கோயில் சற்றுத் தாழ்வாகப் போய் விட்டதாம். இதனால், நின்ற நிலையில் சமாதியைத் தரிசிக்க முடியாது. எல்லோரும் தரையில் அமர்ந்து தியானம் செய்து தன்னை வழிபட வேண்டும் என்று சுவாமிகள் விரும்பினாரோ, என்னவோ... உட்கார்ந்துதான் இங்கே தரிசனம் செய்ய முடியும். சுவாமிகளுக்குக் கைங்கர்யம் செய்யும் அன்பர் உள்ளே செல்லும்போது குனிந்த நிலையில்தான் செல்ல வேண்டும் ஆனால், கருவறை விசாலமானது. நான்கு சர விளக்குகளின் தீப ஒளியில் சம்மணமிட்டு அமர்ந்து, வலக்கை ஜப மாலை தாங்கி சின்முத்திரை கோலத்துடன் அருள் புரிகிறார் ஸ்ரீகுருலிங்க சுவாமிகள். மலர்களின் நறுமணமும், விபூதி வாசனையுமாக - பார்ப்பதற்கே பரவசமான தரிசனம். இடது உள்ளங்கையில், ஒரு லிங்கத்தை உள்ளடக்கி வைத்திருக்கிறார். சுவாமிகளின் திருக்கரத்தில் அடிக்கடி லிங்கம் உருவாகும் என்பதைக் குறிப்பதற்காக இப்படி ஒரு காட்சி போலும். தலையில் கொண்டை, நீண்ட தாடி என்று காட்சி தரும் சுவாமிகளின் திருவுருவம் நம்மிடம் பேசுவது போல் தத்ரூபமாகக் காணப்படுகிறது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar