விருதுநகர் : விருதுநகர் பரா வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. பரா வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி விழா ஜூன் 7 ல் கொடியேற்றுடன் துவங்கியது ஜூன் 19 வரை நடக்கும் விழாவின்போது தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பக்தர்கள் பொங்கல் வைத்து, அக்கினி சட்டி, கயிறு குத்து , மண் சிலை நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடந்த தேரோட்டத்தில் பிள்ளையார் சிறு தேரிலும், வெயிலுகந்தம்மன், மாரியம்மன் ஆகியோர் பெரிய தேரிலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் கோஷங்களுடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மெயின் பஜார், மேலத்தெரு வழியாக கோயில் வந்து சேர்ந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வெள்ளிக்கிழமை அம்மன் மஞ்சள் நீராடி கொடி இறக்குதலும், சனிக்கிழமை தீர்த்தவாரி மண்டபத்தில் அம்மன் ஊஞ்சல், நகர் வலமும் நடக்கிறது.