பதிவு செய்த நாள்
17
ஜூன்
2011
10:06
பெரம்பலூர்: ஸ்ரீ செல்லியம்மன், வெள்ளதாங்கியம்மன் கோவிலில், கடந்த 3ம் தேதி பூச்சொரிதலுடன் திருவிழா துவங்கியது. ஏழாம் தேதி காப்புகட்டுதலும், 10ம் தேதி குடி அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதைத்தொடர்ந்து அன்னம், மயில், சிம்மம், ரிஷபம், பூப்பல்லாக்கு, குதிரை போன்ற வாகனங்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது.
16ம் தேதி காலை 9.30 மணியளவில் வெள்ளந்தாங்கியம்மன் தேரோட்டவிழா வெகுவிமர்சையாக நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் தரேஸ் அகமது, பெரம்பலூர் எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்செல்வன் ஆகியோர் தேரின் வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., சுப்ரமணியன், ஆர்.டி.ஓ., ரேவதி, தாசில்தார் சரவணன், நகர வர்த்தக சங்க தலைவர் பழனியாண்டி, நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ராமச்சந்திரன், அறங்காவலர் வைத்தீஸ்வரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
17ம் தேதி மாவிளக்கு பூஜையும், ஊஞ்சல் நிகழ்ச்சியும், 18ம் தேதி காப்பு அறுப்பு, மஞ்சள் நீர் விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அர்ஜூனன், பரம்பரை அறங்காவலர்கள் தர்மராஜன், லோகநாதன் மற்றும் பூசாரிகள், காரியக்காரர்கள், பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.