பதிவு செய்த நாள்
17
ஜூன்
2011
10:06
கும்பகோணம்: கும்பகோணம் சக்கரபாணி ஸ்வாமி கோயிலில் நடந்த தெப்பத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கோயில்நகரமான கும்பகோணத்தில் காவிரியின் தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது, கும்பகோணம் சக்கரபாணி ஸ்வாமி திருக்கோயிலாகும். ஜலந்தராசுரன் எனும் அசுரனை அழிக்க, மகாவிஷ்ணுவால் அனுப்பப்பட்ட கரம், அந்த அசுரனை அழித்தபின், கும்பகோணம் நகரில் காவேரியின் தென்கரையில் பூமியை பிளந்து வெளிபட்டு, காவிரி நதிக்கரையில் பிரம்மனின் கையில் வந்தமர்ந்தது. பிரம்மா சக்கரத்தை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த சக்கரமானது சூரியனின் ஒளியை விட பல மடங்கு பிரகாசமாய் ஒளிர, அதனைக்கண்டு கர்வம் கொண்ட சூரியன் சக்கரத்தின் ஒளியை விட பல மடங்கு அதிமாக தன் ஒளியைக் கூட்ட, சக்கரமானது சூரியனின் கர்வத்தை அடக்க எண்ணி பேரொளியை விடுவித்து சூரியன் ஒளியை தன் ஒளியில் அடக்கியது. ஒளியிழந்த சூரியன் தனது தவறை உணர்ந்து தனக்கு மீண்டும் அந்த ஒளி கிடைக்கவும், இத்தலம் தனது பெயரால் பாஸ்கர சேத்திரம் என வழங்கப்பெறவேண்டும் என வேண்ட, ஸ்வாமி சக்கரத்திலிருந்து சக்கரபாணிசுவாமியாக சூரியனுக்கு காட்சி தந்து அருளினார் என்பது ஐதீகம். அதன்படி வரம் கிடைக்கப்பெற்ற சூரியன், சக்கரபாணி ஸ்வாமிக்கு அவ்விடத்திலேயே ஆலயம் நிர்மாணம் செய்து வழிபட்டு வரலானான். பெருமைகள் பல பெற்ற இந்த தலம், சக்கரபாணி ஸ்வாமி திருக்கோயிலாக பக்தர்களுக்கு வேண்டுவதை அளிக்கும் அருட்கோயிலாகவும் திகழ்கிறது. சக்கரபாணி ஸ்வாமியை சூரியன், பிரம்மன், மார்கண்டேயன், அகிர்புதன்ய மகரிஷி, அக்னிபகவான் ஆகியோர் வழிபட்டதால், வேறு எங்கும் இல்லாதவகையில் செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி மற்றும் குங்குமம் ஆகிய பொருள்கள் கொண்டு ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. இத்தகைய பல சிறப்புகளை பெற்ற இக்கோயிலில் கடந்த 15ம் தேதி 11மணிக்கு சிறப்பு சுதர்சன ஹோமம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது. இரவு 8மணிக்கு சக்கரபாணி ஸ்வாமி விஜயவல்லிதாயார், சுதர்சனவல்லிதாயார் சமேதராக கோயில் வளாகத்திலுள்ள கரபுஷ்கரணியில் மின் ஒளி அலங்கார தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சக்கரபாணி ஸ்வாமி, விஜயவல்லிதாயார்,சுதர்சனவல்லிதாயாரை வழிபட்டனர்.