பதிவு செய்த நாள்
02
பிப்
2015
02:02
வடலுார்:கடலுார் மாவட்டம், வடலுார் சத்திய ஞான சபையில், 144--வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது.
இதையொட்டி, கடந்த, 27 மற்றும் 28ம் தேதிகளில் தரும சாலையில் மகாமந்திரம் ஓதுதல், 29ம் தேதி முதல் நேற்று வரை ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் ஆகியவை நடைபெற்றன. ஞானசபையில், இன்று காலை, 5:00 மணிக்கு அகவல் பாராயணம், 7:30 மணிக்கு தரும சாலை, வள்ளலார் அவதரித்த மருதுார், கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெறும்.
காலை, 10:00 மணிக்கு, பார்வதிபுரம் கிராமவாசிகள் முன்னிலையில், சத்திய ஞானசபையில் சன்மார்க்க கொடி உயர்த்துதல் நடைபெறும். நாளை காலை, 6:00 மணி; 10:00 மணி; பகல், 1:00; இரவு, 7:00; 10:00 மணி, பிப்ரவரி, 4ம் தேதி காலை, 5:30 மணி ஆகிய நேரங்களில், ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.வரும், 5ம் தேதி வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெறும்.