பதிவு செய்த நாள்
17
ஜூன்
2011
10:06
திருச்செங்கோடு: திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவையொட்டி, 19ம் தேதி அதிகாலை வாண வேடிக்கைகளுடன் ஸ்வாமி திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா, கடந்த இரு வாரத்துக்கு முன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, விநாயகர், செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவப்பெருமாள் ஸ்வாமி திருத்தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. தொடர்ந்து, ஸ்வாமி தேர் நிலைகளை அடைந்தவுடன், ஸ்வாமி மண்டப கட்டளையாக நெய்க்காரப்பட்டி, சர்க்கார் நந்தவனம், கைலாசநாதர் கோவில் மற்றும் கட்டளை இடங்களில் கட்டளைகள் நிறைவடைந்தவுடன், நான்கு கால் மண்டபத்தில் ஊஞ்சலாடி, மலையடிவாரம் ருத்ராட்ச மண்டபத்தில் மாலை மாற்றி, வாண வேடிக்கைகள் முழங்க திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி, ஸ்வாமி திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி 19ம் தேதி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், அதிக அளவிலான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.