பதிவு செய்த நாள்
17
ஜூன்
2011
10:06
சபரிமலை: சபரிமலையில் செயல்படுத்தப்பட திட்டமிட்டுள்ள மாஸ்டர் பிளான் செயல்பாடுகளை விரைவாக முடிக்க தனிப்பிரிவு அமைக்கப்படும் என, மாநில தேவஸ்வம் போர்டு அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலையில் அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் துவக்கப்பட்டு ஆண்டுகளாகியும் இன்னமும் முடிந்தபாடில்லை.இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின், தேவஸ்வம் துறை புதிய அமைச்சராக பதவி ஏற்றுள்ள சிவகுமார், சபரிமலையில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், "சபரிமலையில் பக்தர்களின் பல்வேறு வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் பிளான் வசதிகளை விரைவாக செய்து முடிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சபரிமலை மாஸ்டர் பிளான் செயலாக்கப் பிரிவு (மாஸ்டர் பிளான் இம்ப்ளிமென்டேஷன் செல்) உருவாக்கப்படும்.இப்பிரிவுக்கு கூடுதல் தலைமைச் செயலர் தலைவராக இருப்பார். அடுத்தாண்டு (2012) மண்டல மற்றும் மகர ஜோதி உற்சவம் துவங்குவதற்கு முன், மாஸ்டர் பிளான்படி பெரும்பாலான பணிகளை முடித்து விட வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது.
சபரிமலை வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்க, அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டம் விரைவில் முதல்வர் தலைமையில் நடைபெறும். சபரிமலை மற்றும் நிலக்கல் பகுதிகளில் வளர்ச்சிக்காக வனத்துறை வசம் உள்ள இடங்களை பெற, மத்திய அரசை மாநில அரசு அணுகும் என தெரிவித்தார். தலைநகர் திருவனந்தபுரத்தில், மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் இப்ராகிம் குஞ்சு கூறுகையில், "சபரிமலை நோக்கிச் செல்லும் அனைத்து பாதைகளும் சர்வதேச தரத்திற்கு ஏற்ப அமைக்கப்படும்.இதற்காக 100 கோடி ரூபாய் செலவிடப்படும். மேலும், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாகரன் நினைவாக, அவரது சொந்த தொகுதியான மாளா பகுதியில் நினைவு சதுக்கம் அமைக்கப்படும். இவற்றை அரசின் 100 நாள் செயல்பாடு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்றார்.
ஐயப்பனை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்களின் கவனத்திற்கு...
நாட்டில் ஐயப்பனுக்கென பல கோயில்கள் இருந்தாலும், கேரளமாநிலம், பந்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மட்டுமே மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் இந்த ஐயப்பனை தரிசிக்க கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதில் வெளிநாட்டு பக்தர்களும் உண்டு. இங்குள்ள ஐயப்பன் பிரம்மச்சரிய கோலத்தில் குத்துக்காலிட்டு, யோகநிலையில், சின்முத்திரையுடன் அருள்பாலித்து வருகிறார். இவரை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்கள் 10வயதிற்குள்ளாகவும், 50 வயதிற்கு மேலாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே 11வயது முதல் 49 வயது வரை உள்ள பெண் பக்தர்களை பம்பைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுவதே கிடையாது. அப்படி இவர்கள் வந்தாலும், பம்பையில் உள்ள கணபதி கோயிலிலேயே நிறுத்தப்பட்டு விடுகிறார்கள். அதே சமயம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பக்தர்களாக இருந்தாலும் கூட, பணியிலிருக்கும் போலீஸ்காரர்களுக்கு பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் வந்து விட்டால், அவர்களுடைய வயதை சரிபார்க்க பேன்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளார் அட்டை போன்ற போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்கும் படி கூறுகிறார்கள். இதில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டு, இது போன்ற அடையாள அட்டை இல்லாத நிலையில் அவர்கள் பம்பையிலேயே நிறுத்தப்படுகின்றனர். எனவே இந்த பெண்பக்தர்களால் ஐயப்பனை தரிசிக்க முடியாது. அதுமட்டுமின்றி, இவர்களுடன் வரும் ஆண் பக்தர்களும் இவர்களை தனியாக விட்டு விட்டு ஐயப்பனை தரிசிக்க செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இது போன்ற நடைமுறை சிக்கலை தவிர்க்க, பெண்பக்தர்கள் தங்களுக்கான அடையாள அட்டை மற்றும் அதற்கான போட்டோ காப்பியை எடுத்து செல்ல வேண்டும். இது போன்ற விஷயங்களை சபரிமலைக்கு அழைத்து செல்லும் டிராவல்ஸ் நிறுவனங்களும், குருசாமிமார்களும் பெண் பக்தர்களுக்கு எடுத்து கூறுவது மிக மிக முக்கியம்.