பதிவு செய்த நாள்
17
ஜூன்
2011
12:06
சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோயில்...சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப்பெருமாள்...அந்த ஊரில் வசித்தவர் ஆசூரிகேசவாசாரியார். இவர் வேள்விகள் செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். அதனால், இவருக்கு ஸர்வக்ரது என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர். இந்த சொல்லுக்கு எல்லா வேள்விகளையும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால், இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர். இந்த சமயத்தில் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் (யமுனைத்துறைவர்)என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி. பெருமாள் மீது ஆளவந்தார் இயற்றிய துதிகள் அருமையானவை. நாத்திகர்கள் கூட அவரது பாடலைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்கு சென்று விடுவார்கள் என்றால், அதன் இனிமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியாரும் காந்திமதியும் இல்லற வாழ்வை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதிகளுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. தெய்வத்திவம் முறையிட்டால் குறைகள் தீரும். அதிலும் வேள்விகள் இயற்றுவதில் சிறந்த கேசவாசாரியாருக்கு எந்த தெய்வத்திடம் குறையைச் சொல்லலாம் என யோசித்த போது, விருந்தாரண்யம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பெருமாள் ஸ்தலம் நினைவில் வந்தது. திருவல்லிக்கேணி என்ற குளத்தின் கரையில் அது அமைந்திருந்தது. அந்த குளத்தின் பெயர் தான் இன்றைக்கு அவ்வூருக்கு அமைந்து விட்டது. ஆம்...அது தான் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில். அங்கு சென்று அவர்கள் மகப்பேறு குறித்த வேள்விகளைச் செய்தனர். இதன் பிறகு, கேசவாசாரியார் ஓய்வெடுக்க ஓரிடத்தில் அமர்ந்தார். கண்களைச் சுழற்றவே தூங்கி விட்டார். அப்போது, பார்த்தசாரதி பெருமாள் கனவில் வந்தார். கேசவா! நீர் ஒழுக்கசீலர், வேள்விகள் இயற்றி எம்மைத் திருப்தி செய்பவர், உமது பக்தி ஆழமானது. குழந்தை இல்லா கவலை இனி உமக்கு தேவையில்லை. நானே உமக்கு குழந்தையாகப் பிறப்பேன். இவ்வுலக மக்கள் பூர்வாச்சாரியார்கள் அருளிய உபதேசங்களின் மகிமை புரியாமல், தங்களையே உயர்வாக எண்ணிக்கொண்டு வாழ்கின்றனர். அகந்தை கொண்டு தீமை பல புரிகின்றனர். எனவே, அவர்களைக் கடைத்தேற்ற நான் அவதாரம் எடுப்பேன். இனி நீர் ஊர் திரும்பலாம். உம் விருப்பம் விரைவில் நிறைவேறும், என்றார்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் கேசவாசாரியார் ஊர் திரும்பினார். ஓராண்டு கடந்தது. காந்திமதி அம்மையார் கர்ப்பவதியானார். கலியுகம் 4118, ஆங்கில ஆண்டு 1017, சித்திரை 12, வியாழன், திருவாதிரை, வளர்பிறை பஞ்சமியன்று அவதரித்தது அந்தத் தெய்வக்குழந்தை. இதனிடையே, காந்திமதி அம்மையாரின் தங்கையான தீப்திமதிக்கும் ஆண்குழந்தை பிறந்தது. அக்காவின் குழந்தையைப் பார்க்க தங்கை தீப்திமதி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். தங்கள் இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்ததில் அவர்களுக்கு பரம சந்தோஷம். தங்கைகளுக்கு குழந்தை பிறந்த செய்தியறிந்த பெரிய திருமலை நம்பி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். காந்திமதியின் குழந்தை லட்சுமணனின் அவதாரம் என்பது புரிந்தது. எனவே, குழந்தைக்கு ராமானுஜன் என்று பெயர் வைத்தார். ராமனுக்கு இளையவன் என்பது இதன் பொருள். தீப்திமதியின் குழந்தைக்கு கோவிந்தன் என பெயரிட்டார். இன்னும் சிலகாலம் கழித்து, தீப்திமதி பெற்ற மற்றொரு ஆண் குழந்தைக்கு சிறிய கோவிந்தப் பெருமாள் என்று பெயர் சூட்டினர். அக்காலத்தில், குழந்தைகள் பிறந்து நான்கு மாதம் கழிந்ததும், சூரியனைப் பார்த்தல் என்னும் சடங்கைச் செய்தனர். ராமானுஜனுக்கும், கோவிந்தனுக்கும் இந்த சடங்கு நடந்தது. பிறகு முதல் சோறு ஊட்டுதல், காது குத்துதல், மொட்டையடித்தல், கல்வி துவக்கம், உபநயனம் என வரிசையாக சடங்குகள் நடத்தப்பட்டன.