பதிவு செய்த நாள்
05
பிப்
2015
11:02
வேலூர்: தைப்பூச திருவிழாவையொட்டி, கொதிக்கும் எண்ணெயில் இருந்து, கையால் வடை எடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், தொரப்பாடி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில், நேற்று முன்தினம், தைப்பூச திருவிழா கோலாகல மாக நடந்தது.
அன்று காலை 5:00 மணி முதல், தீ மிதிப்பது; காவடி எடுப்பது; சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. பின், மார்பு மீது அம்மியை வைத்து உலக்கை யால் மஞ்சள் இடிப்பது; முள் மீது படுப்பது; கொதிக்கும் எண்ணெயில் இருந்து கையால் வடை எடுப்பது; கயிறு மூலம் அலகு குத்தி, சுவாமிக்கு மாலை அணிவித்து, தீபாராதனை செய்வது; செக்கு இழுப்பது, நாக்கில் அலகு குத்தி வேல் அணிந்து பூந்தேர், டிராக்டர், டெம்போ, பஸ், உரல் போன்றவற்றை இழுப்பது என பக்தர்கள், விதம் விதமான நேர்த்திக் கடன்களை செலுத்தினர். திருவிழாவை காண, ஆயிரக்கணக்கான பக்தர் கள் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.