பதிவு செய்த நாள்
19
பிப்
2015
11:02
திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தியில், நேற்று காலை தேரோட்டம், வெகு விமரிசையாக நடந்தது. ஸ்ரீகாளஹஸ்தியில், கடந்த ஆறு நாட்களாக, மகா சிவராத்திரியை ஒட்டி, வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, லிங்கோத்பவர் தரிசன சேவை துவங்கியது. லிங்கோத்பவர் தரிசனத்திற்கு, பக்தர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை, 9:00 மணிக்கு, தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், காளஹஸ்தீஸ்வரரும், ஞானா பிரசூணாம்பிகையும் எழுந்தருளி, மாட வீதிகளை வலம் வந்தனர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, வடம் பிடித்தனர். இரவு 8:00 மணிக்கு, தெப்போற்சவம் நடந்தது. சிவனும், அம்மையும் கோவில் அருகில் உள்ள நாகாபரண புஷ்கரணியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்தனர்.
தேரோட்டத்தில் நெரிசல்: காளஹஸ்தியில் நடந்த தேரோட்டத்தின்போது, பக்தி பரவசத்துடன், பக்தர்கள் தேர் கயிற்றை, உட்புறமாக நின்றபடி இழுத்தனர். அப்போது, ஒருவர் மீது ஒருவர் மோதி, கீழே விழுந்தனர். உடனே அதிகாரிகள், கயிற்றுக்கு உட்புறம் நின்ற பக்தர்களை வெளியேற்றி, வெளிப்புறமாக நின்று, வடம் பிடிக்க வைத்தனர்.