பதிவு செய்த நாள்
19
பிப்
2015
12:02
வத்திராயிருப்பு : மகாசிவராத்திரி முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டிற்காக பக்தர்தர்கள் திரண்டதால் கிராமங்களில் கண்மாய்கரை , வயல்வெளி , மரத்தடி பூர்வீகக் கோயில்கள் களைகட்டின. சிவராத்திரியன்று இரவுவிடிய விடிய குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது விஷேசமானதும், நன்மையளிக்கக்கூடியது என்பதால் அன்றைய தினம் குலதெய்வம் இருக்கும் இடம் தேடி சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி வத்திராயிருப்பு பகுதியை பூர்வீகக்குடிகளாக கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் பக்தர்கள் நேற்று இங்குள்ள கோயில்களில் திரண்டதால் அக்கோயில்கள் களைகட்டின. கூமாப்பட்டி முனீஸ்வரர் கோயில், விராகசமுத்திரம் கண்மாய் கரையில் உள்ள சப்பாணிமுத்தையா கோயில், மகாராஜபுரம் இரட்டை ஆலமரத்தடி கருப்பசாமி கோயில், வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள கருப்பசாமி கோயில், வயல்வெளிகளில் உள்ள பேச்சியம்மன் கோயில், வீரபத்திரர் கோயில், மங்கையர்கரசி கோயில், சுந்தரபாண்டியம் வைகுண்டமூர்த்தி அய்யனார் கோயில், மருதப்பசுவாமி கோயில், அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கோயில், நல்லதம்பி கோயில் என பல்வேறு கோயில்கள் மேளதாளங்கள் முழங்க வண்ண விளக்குகள், பக்திப்பாடல்கள் ஒலிக்க விழாக்கோலம் பூண்டிருந்தன. இக்கோயில்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள், பிரார்த்தனை, நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தது.