குளச்சல் : பசுவின் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கூட்டுமங்கலம் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கோசம்ரக்ஷன சமிதி என்ற பசுவின் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கூட்டுமங்கலம் கிருஷ்ணன் கோயிலில் நேற்று காலை முதல் மாலை வரை கோ யாக பூஜை நடந்தது. பின்பு நடந்த பொதுக்கூட்டத்திற்கு விவேகானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். இந்து முன்னணி குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் கிருஷ்ணதாஸ் அறிமுகம் செய்தார். தலக்குளம் சுப்பிரமணியன் மற்றும் பிராந்த சகசேவா பிரமுக் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். இதில் பிராந்த சக சேவா பிரமுக் ஆறுமுகம் பேசும் போது தமிழகத்தில் பசுவினம் பெருகுவதற்காக தமிழக அரசு பசுவளர்ப்பிற்கு மானியம் வழங்க வேண்டும். பசுவிற்கான தீவனங்கள் குறைந்த விலையில் வழங்க வேண்டும். பசுவின் சாணி உரமாக பயன்படுகிறது. கோமியம் மருந்தாக பயன்படுகிறது. பசுவின் பால் சிறந்த ஊட்டச்சத்து உணவாக உள்ளது. மனித வாழ்க்கைக்கும் விவசாயிகளின் நண்பனாகவும் உள்ள பசுவினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இறைச்சிக்காக பசுக்கள் கொலை செய்வதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு பிராந்த சக சேவா பிரமுக் ஆறுமுகம் பேசினார். இப்பொதுக்கூட்டத்தில் குமரி மாவட்டத்திலிருந்து லாரிகள் மூலம் கேரளாவிற்கு இறைச்சிக்காக பசுக்களை கடத்துவதை தடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதில் மூன்று ஏழைகளுக்கு பசுக்கன்றுகள் தானமாக வழங்கப்பட்டது. மேலும் கொழுகொழு பசுவிற்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கோ பூஜையிலும் பொதுக்கூட்டத்திலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோபூஜை ஏற்பாடுகளை சதீஷ்குமார், ஸ்ரீனிவாசன், வேலாயுதன், ரமேஷ், வாமணன், சுரேஷ், ரெகு உட்பட பலர் செய்திருந்தனர்.