பதிவு செய்த நாள்
21
பிப்
2015
11:02
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகேகீழச்சாக்குளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பாரிவேட்டை திருவிழா நடைபெறும். இதில், பக்தர்கள் தங்களின் குறைகள் தீர வேண்டி செம்மறி, வெள்ளாடுகளை நேர்த்திக்கடனாக செலுத்துவர். இந்தாண்டுக்கான திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு, "உச்சிபூஜை முடிந்தவுடன், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 89 ஆடுகளை பலிகொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அவற்றின் இறைச்சிகளில் ஒரு துண்டைக்கூட யாரும் வீடுகளுக்கு எடுத்து செல்லாமல், இரவோடு இரவாக சமைத்து மறுநாள் காலையில் பொது மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இறைச்சி சாப்பிடாதவர்கள்கூட பிரசாதமாக நினைத்து அன்னதானத்தில் பங்கேற்றனர். கோயில் பூஜாரி முனியாண்டி கூறுகையில், ""மற்ற கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், ஆடுகளை பலியிட்டவுடன் வீடுகளுக்கு எடுத்து சென்று, தங்களுடைய உறவினர்களுடன் சமைத்து சாப்பிடுவர். கீழச்சாக்குளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் நேர்த்தி கடன் செலுத்தும் ஆடுகளின் இறைச்சி அனைத்து சமூகத்தினரும் உண்டு மகிழும் வகையில், அன்னதானமாக வழங்கப்படுகிறது. பகை உணர்வுள்ள நண்பர்கள், உறவினர்கள், இத்திருவிழா மூலம் இணைந்து, மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர், என்றார்.நேற்று சுவாமிகள் வீடு திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் வரவேற்றனர். நிகழ்ச்சி துவங்கியதும் பக்தர்கள் நேர்த்தி கடனாக 4 ஆயிரத்துக்கும் அதிகமான தேங்காய்களை, ஊர் மத்தியில் உடைத்து வழிபட்டனர்.கடந்த 5 ஆண்டுகளுக்குமுன்பு, நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் அனைத்து தேங்காய்களும் உடைக்கப்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு தேங்காய்களை சேகரிக்க பொதுமக்களுக்கு ஆர்வம் இல்லாததால் தேங்காய்கள் தேங்கி விட்டன.