பதிவு செய்த நாள்
23
பிப்
2015
12:02
மாமல்லபுரம்: கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலில், அடுத்த மாதம் 13ம் தேதி, தெப்போற்சவம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது. மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி கிராமத்தில் மாரி சின்னம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின், மாமல்லபுரம் ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படும் இக்கோவில், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின், குறிப்பிட்ட பக்தர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கோவிலில் மகா மண்டபம், புதிதாக அமைக்கப்படுகிறது. இதையடுத்து, பழைய மேற்கூரை அகற்றப்பட்டு, அலங்கார மண்டபம் அமைக்கும் திருப்பணி துவங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், மகா மண்டபத்திற்கு மட்டுமே திருப்பணி நடக்கிறது. கருவறை சன்னிதியில் வழக்கம் போல் வழிபாடு நடைபெறுகிறது. அடுத்த மாதம் 13ம் தேதி, தெப்போற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றனர்.