பதிவு செய்த நாள்
21
ஜூன்
2011
11:06
திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் சமேத சிவகாமி அம்மன்,யோக பைரவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். கடந்த ஜூன் 17ம் தேதியன்று யாகசாலை பூஜை துவங்கியது. பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் 85 சிவாச்சாரியார்கள் யாக சாலையில் பூஜையை மேற்கொண்டனர். நான்காவது நாளான நேற்று காலை 5 மணிக்கு பூஜை துவங்கியது. நேற்று காலை 9.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்களுடன் 11 விமானங்கள்,இரண்டு ராஜகோபுரத்திற்கு சென்றனர். காலை 9.59 மணிக்கு திருத்தளிநாதர் திருக்கற்றாளியின் விமானத்தில் இருந்த குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகள் கொடியினை அசைக்க,வாத்தியங்கள் ஒலிக்க, திருத்தளிநாதர் விமான நாற்கர கலசத்தில் பிச்சைக்குருக்கள் புனித நீரால் குடமுழுக்காடினார். அதே நேரத்தில் பிற விமான,கோபுர கலசங்களுக்கும் சிவாச்சாரியார்களால் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8 மணி முதலே பக்தர்கள் திரளாக கோயிலுக்கு வந்திருந்தனர். திருவாடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சுவாமி, துளாவூர் ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா,முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், எம்.எல்.ஏ.,க்கள் சோழன் பழனிச்சாமி, விஜயபாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உமாதேவன்,கற்பகம், அருணகிரி, பூமாயி அம்மன் கோயில் அறங்காவலர் தங்கவேல், ஆ.பி.சீ.அ.கல்லூரி செயலர் ராமேஸ்வரன், அறநிலையத்துறை ஆஸ்தான ஸ்தபதி முத்தையா,ஆந்திர மாநில முன்னாள் ஆஸ்தான ஸ்தபதி கணபதி, டி.எஸ்.பி.முருகேசன், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நேற்று முன்தினம் நடந்த யாகசாலை பூஜையில் மத்திய அமைச்சர் சிதம்பரம், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி, மதுரை ஆதீனம்,திருப்பனந்தாள் சுவாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தார் செய்திருந்தனர்.