பதிவு செய்த நாள்
24
பிப்
2015
11:02
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள கொடி மரத்திற்கு, சிறப்பு பூஜைகள் செய்து கொடி ஏற்றினர். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. இரவு 7:00 மணிக்கு, உற்சவ பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கேடய வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, காலை 9:30 மணிக்கு, வெள்ளி சூர்யபிரபை வாகனத்திலும்; இரவு 7:00 மணிக்கு பூத வாகனத்திலும் உற்சவ பெருமான் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் மார்ச் 1ம் தேதி இரவு, தங்கத்தேர்; 2ம் தேதி, வள்ளி திருக்கல்யாண உற்சவம்; 4ம் தேதி, கொடி இறக்கம்; 5ம் தேதி, சப்தாபரணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.