பதிவு செய்த நாள்
24
பிப்
2015
12:02
மடத்துக்குளம் : வரலாற்று சிறப்புமிக்க கரிவரதராஜ பெருமாள் கோவில் மற்றும் மண்ணில் புதைந்துள்ள சிலைகளை, வருவாய்த்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். மடத்துக்குளம் பகுதியில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பல கோவில் கள் உள்ளன. இதில், சில கோவில்கள் பூஜையின்றி பூட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்றான கொமரலிங்கம் கரிவரதராஜ பெருமாள் கோவில், 30 ஆண்டுகளுக்கு பின், கடந்தாண்டு மார்ச் 27ல், பொதுமக்கள் முன்னிலையில் அறநிலையத்துறை அதிகாரிகளால் திறக்கப்பட்டது. கோவிலை ஆய்வு செய்த அதிகாரிகள், விரைவில் புதுப்பிக்கப்படும் என்றனர். ஆனால், இதுவரை பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், பெருமாள் கோவில் மற்றும், அப்பகுதியில் மண்ணில் புதைந்துள்ள சிலைகளை, வருவாய்த்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். மடத்துக்குளம் தாசில்தார் சண்முக வடிவேல் கூறுகையில்,""கோவில் மற்றும் சிலைகள் மண்ணில் புதைந்து கிடக்கும் பகுதிகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். தொல்லியல் ஆய்வுத்துறை, கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ.,க்கு தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது. மண்ணில் புதைந்துள்ள சிலைகள், விரைவில் மீட்கப்படும், என்றார். பொதுமக்கள் கூறுகையில், "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவில், பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. ஆச்சரியப்படத்தக்க கட்டட கலையை பயன்படுத்தியுள்ளனர். அமராவதி ஆற்றின் நீர்வரத்துக்கும், கோவிலுக்குள் உள்ள அகழிக்கும் இணைப்பு உள்ளது. வரலாற்று தகவல் கூறும் கல்வெட்டுகளும் உள்ளன. சிறப்பு வாய்ந்த இக்கோவில், பாழடைந்துள்ளதோடு, இதன் சிலைகள் பல, அருகே உள்ள விளைநிலங்களில் புதைந்துள்ளன. இதுகுறித்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, புதைந்துள்ள சிலைகளை மீட்டு, கோவிலை புதுப்பிக்க வேண்டும், என்றனர்.