பதிவு செய்த நாள்
04
மார்
2015
02:03
புதுச்சேரி:புதுச்சேரியில் நடக்கும் மாசிமக தீர்த்தவாரியில், தீவனுார் லட்சுமிநாராயண பெருமாள் எழுந்தருள்கிறார்.வைத்திக்குப்பம் கடற்கரையில், மாசிமக தீர்த்தவாரி விழா நாளை நடக்கிறது. தீர்த்தவாரியில் பங்கேற்க, தீவனுார் கிராமத்தில் இருந்து, லட்சுமிநாராயண பெருமாள் நேற்று முன்தினம் புறப்பட்டார். நேற்று காலை 10 மணிக்கு, பட்டானுார் ஜெகன்நாத் ஆலயத்தில், லட்சுமிநாராயண பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது.இன்று 4ம் தேதியன்று, பட்டானுாரில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரிக்கு வரும் பெருமாளுக்கு பிள்ளைத்தோட்டத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு, ஆனந்தமுத்து மாரியம்மன் கோவிலில் காலை 11.30 மணிக்கு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடக்கிறது.மாலை 7 மணிக்கு, விசேஷ அலங்காரத்துடன் லட்சுமிநாராயண பெருமாள் லெனின் வீதி, காமராஜர் சாலை, நேரு வீதி வழியாக சென்று, தியாகராஜர் வீதியில் பத்மாசன விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளுகிறார்.
நாளை 5ம் தேதியன்று காலை, வைத்திக்குப்பம் கடற்கரையில் நடக்கும் தீர்த்தவாரியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மாலை 5 மணிக்கு, தியாகராஜ வீதி பத்மாசன விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளிகிறார். வரும் 6ம் தேதி பத்மாசன விநாயகர் ஆலயத்திலும், 7ம் தேதி வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில் திருமண மண்டபத்திலும் லட்சுமிநாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் முடிந்து, மாலை 6 மணிக்கு மேல் புறப்பாடாகிறார்.