பதிவு செய்த நாள்
06
மார்
2015
12:03
ஓசூர்: ஓசூரில் நேற்று நடந்த சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள, மரகதாம்பாள் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 27ம் தேதி காலை, 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, 28ம் தேதி இரவு, 9 மணிக்கு, மயில் வாகன உற்சவமும், 1ம் தேதி இரவு, 9 மணிக்கு, நந்தி வாகன உற்சவமும், 2ம் தேதி இரவு, நாகவாகன உற்சவமும், 3ம் தேதி இரவு ரிஷப வாகன உற்சவமும் நடந்தது.தொடர்ந்து, நேற்று முன்தினம் மதியம், 12 மணிக்கு, பிராம்ஹனசந்தர்ப்பனை நிகழ்ச்சியும், இரவு, 7 மணிக்கு, புஷ்ப அலங்காரமும், அதைத்தொடர்ந்து இரவு, 8 மணிக்கு புஷ்பசாற்றுபடியும் நடந்தது. அதன் பின்னர் இரவு, 9 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் மற்றும் இரவு, 10.30 மணிக்கு, யானை வாகன உற்சவமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா, நேற்று காலை, 9.30 மணிக்கு துவங்கியது. மாவட்ட கலெக்டர் ராஜேஷ், கல்யாண சூடேஸ்வரர் கமிட்டி தலைவர் மனோகரன், எம்.எல்.ஏ., கோபிநாத், நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணாரெட்டி, துணைத்தலைவர் ராமு, ஒன்றியக்குழு தலைவர் புஷ்பாசர்வேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்பட, 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள், தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.விநாயகர் தேர் முன்னே செல்ல, சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் வீற்றிருந்த தேர்கள், தொடர்ந்து சென்றன. தேர்கள் மீது, உப்பு, வாழைப்பழம் ஆகியவற்றை வீசி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலத்தில் இருந்த வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.