பதிவு செய்த நாள்
12
மார்
2015
11:03
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், அக்னி குண்டம் இறங்கியும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். பனமரத்துப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா சிறப்பாக நடந்தது. நேற்று, காலை மா விளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், உருள தண்டம் போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாரியம்மன் கோவில் வளாகத்தில், பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் அக்னி குண்டம் தயார் செய்யப்பட்டிருந்தது. மாலை, 4 மணி அளவில், 500க்கும் மேற்பட்டடோர், ஊர்வலமாக வந்து, அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தி, மாரியம்மனை வழிபட்டனர்.மாலை, 5 மணிக்கு, ஈச்சமரம் பிள்ளையார் கோவிலில் இருந்து அலகு குத்துதல் நிகழ்ச்சி துவங்கியது. பலர் அலகு குத்தியபடி ஊர்வலமாக வந்து, மாரியம்மன்னை வழிபட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில், பனமரத்துப்பட்டி, காந்திநகர், அடிக்கரை, கோம்பைக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், மாரியம்மனை வழிபட்டனர். சேலம் ரூரல் டி.எஸ்.பி.,சந்திரசேகரன் தலைமையில், ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா வரதராஜி, விழா குழு தலைவர் குமரேசன், கிருஷ்ணன், தம்பியண்ணன், சின்னதம்பி, பாலு, சஞ்சீவி, செல்வம் உள்ளிட்டோர் விழாவு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.