திருத்துறைப்பூண்டி: திருத்துறைபூண்டி அருகே ஸ்ரீ காத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடந்தது. தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அண்ணாநகர் கோயில், சிங்களாந்தி, நெடும்பலம் ஆகிய கிராமங்களில் காவல் தெய்வமாக மக்களால் வணங்கப்பட்டு வரும், ஸ்ரீ காத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. 15 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணி நடந்து, பாஸ்கர சேது சிவாச்சாரியார் தலைமையில் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். புனித நீர் கடங்கள் ஊர் வலமாக எடுத்து வரப்பட்டு, கருட பகவான் வட்டமிட்டு ஆசிர்வாதம் வழங்க, விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை, திருப்பணிக் குழு தலைவர் புலவர் சண்முகநாதன், செயலாளர் முத்தழகு மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர். கோயில் திருப்பணியை தேவக்கோட்டை டாக்டர் சண்முகநாதன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.