பதிவு செய்த நாள்
16
மார்
2015
12:03
ராசிபுரம் : கொங்கணாபுரம், திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், ராசிபுரத்தில் ஸ்வாமிக்கு பூக்கட்டும் விழா நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரும், 21ம் தேதி யுகாதி எனும் தெலுங்கு வருட பிறப்பு உற்சவ விழா நடக்கிறது. இதையடுத்து, கொங்கணாபுரம் திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், திருப்பதி கோவிலில் உள்ள தங்ககொடி மரம் மற்றும் உள் பிரகாரங்களை அலங்கரிக்க, ராசிபுரம் அகரம் மஹாலில், வரும், 19ம் தேதி பூ கட்டும் பணி நடக்கிறது.இதில், பக்தர்கள் சார்பில், மல்லி, சாமந்தி, ரோஜா, மேரிகோல்ட், துளசி, அரளி, மருவு, தாமரை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களும் மற்றும் கரும்பு, தென்னப்பாளை, தென்னங்குருத்து, பாக்கு குலை, இளநீர், மாங்காய் உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வழங்கலாம். பூ கட்டும் பணி, காலை, 8 மணி முதல், மாலை, 4 மணி வரை நடக்கிறது. திருச்செங்கோடு, சின்னசேலம், கொங்கணாபுரம், நாமகிரிப்பேட்டை, பட்டணம் மற்றும் ராசிபுரம் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பூக்களை கொண்டு, மாலை மற்றும் தோரணமாக கட்டும் பணியில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.