பதிவு செய்த நாள்
16
மார்
2015
12:03
சேலம் : சேலம் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளால் திருவிழாக்கள் தடைபடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட சில இடங்களில், தொடர்ச்சியாக அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. பீதியடைந்த பொதுமக்கள், நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, தங்கள் குல தெய்வம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், "கிடா வெட்டி சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
பழங்காலத்தில், ஒவ்வொரு பகுதியிலும், ஊர் பொதுமக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக திருவிழாக்கள் நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை ஊர் மக்கள் ஜாதி பேதமின்றி திருவிழாக்களை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.ஊர் பொது கோவில்களை தவிர, ஒவ்வொரு சமூகத்தினருக்கும் பிரத்யேகமாக குல தெய்வ வழிபாட்டு தலங்களும் உள்ளது. அந்தந்த சமூகத்தினர் மட்டுமே இங்கு வழிபடுவர். ஊர் பொது கோவில்களில் அனைத்து தரப்பினரும் வழிபடுவது வழக்கமாகும். காலப்போக்கில், ஊர் திருவிழாக்கள் பிரச்னை களமாக உருவெடுக்க ஆரம்பித்தது. குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு இடையே அடிக்கடி பிரச்னைகள் எழுவது, கோவில் பங்காளிகளுக்கு இடையேயான மோதல் உள்ளிட்ட காரணங்களால், விழாக்களில் கடும் மோதல் ஏற்படுவது அதிகரித்தது.
பல பகுதிகளில், சர்ச்சைக்குரிய இடங்களில் திருவிழாக்கள் நடைபெறும் போது, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. பல கோவில்களில், திருவிழாக்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், பண்டிகை நடத்த முடியாத நிலையும் நீடித்து வருகிறது.சமீபத்தில், சேலம் மாவட்டத்தில், கோவில் பண்டிகை, கும்பாபிஷேகம் உள்ளிட்டவற்றை நடத்துவதில், கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டு வருவது வேதனையான விஷயமாகும்.இருதரப்பினருக்கு இடையே எழுந்த பிரச்னையால், திருமலைகிரி சைலகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் தடைபட்டது. அதனால், கும்பாபிஷேகம் திடீரென்று நிறுத்தப்பட்டு கோவிலுக்கும், "சீல் வைக்கப்பட்டது.கும்பாபிஷேகத்துக்காக, அப்பகுதியை சேர்ந்த பலர், மாதக்கணக்கில் விரதம் உள்ளிட்ட கடுமையான பத்தியங்கள் மேற்கொண்டனர். இந்நிலையில், கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டதால், தங்கள் ஊருக்கு பெரும் விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என்று, கலக்கம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கோவில் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், "விழா தடைபட்டதால், அந்த பகுதியில் அடுத்தடுத்து மரணங்கள் ஏற்பட்டு வருகிறது. இது, தெய்வ குற்றம் என்று, அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர் என்று, ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர்.இந்நிலையில், கோவில் விழா தடைபட்ட திருமலைகிரி, சின்னப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. அதற்கு காரணம் பண்டிகை நிறுத்தப்பட்டதுதான் என்று பொதுமக்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது.மேலும் பலர், பழங்காலத்தில் ஊர் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய அம்மை உள்ளிட்ட கடுமையான உடல் உபாதைகள் மீண்டும் ஏற்படும் என்று பீதி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், திருவிழாக்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில், இயற்கையாக மரணங்கள் நிகழ்ந்தால் கூட, தெய்வ குற்றம்தான் காரணம் என்று பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.அதனால், ஊர் கோவில் பண்டிகை தடைபட்டதால், பரிகாரம், சிறப்பு பூஜை என்று பலர் தங்கள் குல தெய்வ கோவில்களுக்கு சென்று, "கிடா வெட்டி, கோழி அறுத்து வழிபாடு நடத்தி திரும்புகின்றனர்.