பதிவு செய்த நாள்
16
மார்
2015
12:03
கரூர்: திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பழமையான பிரசித்திபெற்ற, கரூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு யானை இல்லாததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கரூர் பகுதியில் பசுபதீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றுள்ளது. கோவிலுக்குள் நுழையும் முன், சோழர் மண்டபம் உள்ளது. அடுத்து, பசுபதீஸ்வரர் சன்னிதி, அலங்காரவள்ளி, சவுந்திரவள்ளி சன்னதியும், நவக்கிரஹம், பைரவர் அடுத்தபடியாக சித்தர் கருவூரார் சன்னதியும் உள்ளது. நாள்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு வருபவர்கள் முதலில் கோவிலுக்குள் நுழையும் முன், கோவில் யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம். பிரசித்தி பெற்ற, கரூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கான யானை இல்லாததால், கோவிலுக்காக யானை வழங்க வேண்டும், என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் நினைத்தால் கோவிலுக்கு என தனியாக யானை வாங்க நடவடிக்கை எடுக்க முடியும். கோவிலுக்குள் கோசாலை இருக்கிறது. அந்த இடத்தில் வைத்து, கோவில் யானையை பராமரிக்கலாம், என்று கூறினர்.
இது குறித்து கரூர் பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராஜாராம் கூறியதாவது: கோவிலுக்கு யானை வாங்க வேண்டும் என்றால், பராமரிப்பு மற்றும் இடவசதி வேண்டும். உதவி கமிஷனர் அந்தஸ்தத்தில் உள்ள கோவில்களில் மட்டுமே, யானைகள் இருக்கும். இருப்பினும் அதற்குரிய காலக்கட்டம் வரும் போது, கோவிலுக்கு யானை வாங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, மாவட்ட வன அதிகாரி அல்லிராஜ் கூறியதாவது: ஒரு கோவிலுக்கு யானை வாங்க வேண்டும் என்றாலோ, இலவசமாக யானை கொடுக்க யார் முன் வந்தாலும், முறைப்படி கடிதம் கொடுக்க வேண்டும். இந்த கடிதம் சம்மந்தப்பட்ட கோவில் நிர்வாகம் மூலம் எங்களுக்கு வரும். அதை நாங்கள், சென்னை அருகிலுள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா தலைமை வன உயிரியல் காப்பாளருக்கு அனுப்புவோம். யானை எங்கிருந்து வாங்கிப்படுகிறது. யானை வைத்திருப்பவர் லைசன்ஸ் வைத்திருக்கிறாரா? யானை கொடுப்பவர் யார், என்றெல்லாம் ஆராய்ந்த பின், கோவிலுக்கு யானை வழங்க அனுமதி வழங்கப்படும். யானையை நன்றாக பராமரிக்க இடவசதி உள்ளதா, யானை நல்ல நிலையில் இருக்கிறதா? என்றும் தெரிய வேண்டும். அப்போது தான் உரிய அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.