நாகர்கோவில் : கொல்லங்கோடு தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, வரும் 23-ம் தேதி தூக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களின் ஒன்று கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில். இந்த கோயில் தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. பங்குனி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் நடைபெறும் தூக்கத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குழந்தை வரம் வேண்டுபவர்களும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வாழவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த கோயிலில் தூக்கமரத்தில் குழந்தைகளை ஏற்றுவதாக பெற்றோர் நேர்ச்சை வேண்டுகின்றனர். பிறந்து 90 நாட்கள் ஆனது முதல் ஒரு வயது வரையிலான குழந்தைகள் தூக்கமரத்தில் ஏற்றப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான தூக்கத்திருவிழா சனி அன்று இரவு பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுக்க, பெண்கள் முத்துக்குடை ஏந்தி வர, குழந்தைகள் தாலப்பொலி எடுத்து மலர் தூவ, தேவி வட்டவிளை கோயிலில் இருந்து தூக்கம் நடைபெறும் வெங்கஞ்சி கோயிலுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப் பட்டது. வரும் 23-ம் தேதி பிரசித்தி பெற்ற தூக்கத்திருவிழா நடைபெறுகிறது.