ஆழ்வார்குறிச்சி:கடையம் கைலாசநாதர் - பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் சிவன் வடிவில் விளக்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடையம் பஸ் ஸ்டாண்டில் கைலாசநாதர் - பஞ்சகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமி, கார்த்திகை வழிபாடு உட்பட அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் குமார்பட்டர் சார்பில் உலக நன்மைக்காகவும், நாட்டில் மழை ஏற்பட்டு எப்போதும் செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கைலாசநாதர் பின்புறத்தில் சிவன் வடிவில் சட்டம் அமைத்து அதில் 18 விளக்குகளை அமைத்து விளக்குகள் எப்போதும் எரியும் வண்ணம் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நேற்று சிவன் வடிவில் மரக்கட்டையினால் ஆன சட்டம் அமைத்து 18 பித்தளை விளக்குகள் அதில் பொறுத்தப்பட்டன. நாள் முழுவதும் விளக்கு எரியும் வகையில் நெய் தீபம் ஏற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.