பதிவு செய்த நாள்
17
மார்
2015
11:03
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் சொத்துக்களை அளவீடு செய்து மீட்பது, தங்க தேரோட்டத்திற்கு பாதை சீரமைப்பு உட்பட பல்வேறு பணிகள் குறித்து, தலைமை செயலர் உத்தரவின் பேரில், அதிகாரிகள் குழு நேற்று ஆய்வு நடத்தியது.வாழப்பாடி அடுத்த, அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதிக்கரையில், வாழப்பாடி அடுத்த பேளூரில், பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கோவிலில், 63 நாயன்மார்களில் ஒருவரான கணம்புல்நாயனார் அவதரித்த திருத்தலம் என்பதும், தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால், சுபமுகூர்த்த தினங்கள் தோறும், 100க்கும் அதிகமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.பக்தர்கள் காணிக்கையில் தங்கத்தேர் தயாரிக்கப்பட்டும், பாதுகாப்பு அறை மற்றும் தேரோட்ட பாதை அமைப்பதற்கு முறையான அனுமதி கிடைக்காததால், தேரை கோவில் நிர்வாகத்திற்கு ஒப்படைக்க முடியாமல், தங்கத்தேர் அமைப்பு குழுவை சேர்ந்த பேளூர் பழனிசாமி, ஏ.என்.மங்கலம் மாணிக்கம் ஆகியோர் தவிக்கின்றனர். இந்நிலையில், தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்க வேண்டும். தங்கத் தேரோட்ட பாதையை அரசாணைப்படி சீரமைக்க வேண்டும். கோவிலில் போதுமான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிக்கோரி, ராதாகிருஷ்ணன் என்பவர், தமிழக அரசு தலைமைச் செயலருக்கு, மின் அஞ்சல் வாயிலாக புகார் தெரிவித்துள்ளார்.கோவில் சொத்துக்களை அளவீடு செய்து மீட்பது, தேரோட்ட பாதை சீரமைப்பு உட்பட பல்வேறு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு தலைமை செயலர், சேலம் கலெக்டர் மகரபூஷணத்திற்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, வாழப்பாடி தாசில்தார் செல்வக்குமார், அறநிலையத்துறை ஏ.இ., சித்தையன், ஸ்தபதி கவுதமன், கோவில் செயல் அலுவலர் ராஜகோபால், மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா, பேளூர் ஆர்.ஐ., ஜேஸ்மின், மின்வாரிய ஏ.இ., கலியமூர்த்தி மற்றும் போலீஸார் உள்ளிட்ட அதிகாரிகள் குழு நேற்று ஆய்வு நடத்தியது.தங்கத்தேர் அமைப்புக்குழு நிர்வாகி பழனிசாமி மற்றும் ஊர் பிரமுகர்கள் உடனிருந்தனர்.