பதிவு செய்த நாள்
17
மார்
2015
11:03
சேலம்: திருமலைகிரி சைலகிரீஸ்வரர் கோவில் விவகாரம் தொடர்பாக, நேற்று பல்வேறு சமூகத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு, கும்பாபிஷேகம் நடத்த கோரி, மனு வழங்கி சென்றனர்.சேலம் மாவட்ட வன்னியர் சங்கம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, கொங்குநாடு மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை, செங்குந்த முதலியார் சங்கம் தேவர் பேரவை, சோழிய வேளாளர் இளைஞர் பேரவை, மாவட்ட நாயுடுகள் சங்கம், 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம், ஜங்கமர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று ஒட்டு மொத்தமாக கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.கலெக்டர் மகரபூஷணத்திடம் அவர்கள் வழங்கிய கோரிக்கை மனு:சைலகிரீஸ்வரர் கோவில், வன்னியர் சமுதாய மக்களின் குலதெய்வ வழிபாட்டு கோவில்.
திருக்கோவில் அமைந்துள்ள நிலமானது ஆதிகாலத்தில், தேவதாயம் என்று அழைக்கப்பட்ட வகையில், பிராமணர்களால் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. திருத்தலங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் குல தெய்வமாக வழிபட்டு பூசனைக்காரியங்களை மரபு தவறால் செய்து வந்துள்ளனர். திருக்கோவில் பெருமழையின் போது இடியால் சேதமடைந்தது.கோவில் புதுப்பிக்கும் பணி, 2012ம் ஆண்டு துவங்கி, 2015ம் ஆண்டு முடிவடைந்துள்ளது. 300 கூட்டு குடும்ப வகையறாவின் சொந்த பணம், இரண்டு கோடியே, ஐந்து லட்சம் ரூபாயில் வன்னி சமூகத்தினரால் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்குரிய நாள் தள்ளிப்போவதால், 300 கூட்டு குடும்ப வன்னிய சமுதாய மற்றும் பிற சமுதாய மக்கள் தெய்வ குற்றமாக கருதி இன்று வரை, 6 பேர் வயதில் மூத்தவர்கள் உயிர் இழந்துள்ளனர். இப்பகுதி மக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகின்றனர். மழை பெய்யாது என்ற அச்சமும் மக்களுக்கு உள்ளது.கும்பாபிஷேகம் நடத்தி, கோவிலை நிர்வகித்தும், வழிபட்டு வரவும், 144 தடை உத்தரவை ரத்து செய்திடவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.